கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயில் சேவை சில நாளில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரயில் நிலையங்களில் இறுதிகட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்கள் மற்றும் சாலைகளை விரிவுபடுத்தும் பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தொலைவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறுகட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையரகமும் அனுமதி அளித்துள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மெட்ரோ ரயில் தொடக்க விழா நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. ஆர்.கே.நகரில் நேற்று தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இதையடுத்து, சில நாட்களில்
மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. தொடக்கத்தில் 9 மெட்ரோ ரயில்களை தினமும் காலை 6 முதல் இரவு 10 மணி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு, சிஎம்பிடி, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 ரயில் நிலையங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக ரயில் நிலையங்களில் வண்ணம் பூசுவது, தூய்மைப்படுத்துவது, டிக்கெட் கவுன்ட்டர் அமைப்பது, எஸ்கலேட்டர்களில் ஆய்வு நடத்துவது, பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. தொடங்க விழாவுக்கு முன்பு ரயில் நிலையங்களில் யாரும் நுழையாமல் இருக்க பாதுகாப்பு பணிக்கு தனியார் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ரயில் நிலையங்களின் கீழே உள்ள பேருந்து நிலையங்களில் எந்தவித வசதிகளும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. சாலைகளும் விரிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. கோயம்பேட்டில் இருந்து அரும்பாக்கம், வடபழனி வரை குறுகிய சாலைகளில் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து செல்கின்றன. அங்குள்ள பேருந்து நிறுத்தங்கள் விரிவுபடுத்தப்படவில்லை. மேற்கூரைகள் உடைந்தும், இருக்கை வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் இதற்கான தேதியை அறிவிக்கும். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களை விரிவுபடுத்தவும், கூடுதல் மின்விளக்கு வசதி செய்து தரவும் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதுபோல, தேவையான இடங்களில் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையிடமும், போதிய பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்திடமும் வலியுறுத்தியுள்ளோம். இதற்கான பணிகளை அந்தந்த துறையினர் விரைவில் மேற்கொள்வர்’’ என்றனர்.