தமிழகம்

வாணியம்பாடியில் குப்பையில் கிடந்த வாக்காளர் அட்டைகள்: வருவாய்த் துறையினர் விசாரணை

செய்திப்பிரிவு

வாணியம்பாடியில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியில் உள்ள அபுபக்கர் தெருவில் நேற்று முன்தினம் குப்பை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, குப்பைத் தொட்டியில் இருந்து பிளாஸ்டிக் பை ஒன்றை, ஊழியர் ஒருவர் தனது வீட்டுக்கு எடுத்துச்சென்று பிரித்துப் பார்த்தார்.

அதில், வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதை கொல்லத்தெரு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரிடம் துப்புரவு ஊழியர் ஒப்படைத்தார். இவை வாணியம்பாடி நகராட்சி 18-வது வார்டைச் சேர்ந்த 304 பேரின் வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது தெரிய வந்தது. இவற்றை 18-வது வார்டைச் சேர்ந்த முக்கிய பிரமுகரிடம் பிரகாஷ் நேற்று முன்தினம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், வாக்காளர் அடை யாள அட்டைகளை அப்பகுதி மக்கள் நேற்று கீழே கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் பழனி மற்றும் வட்டாட்சியர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாக்காளர் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2011-ம் ஆண்டு வாணியம்பாடி நகராட்சி வசம் இந்த வாக்காளர் அடையாள அட்டைகளை வருவாய்த் துறையினர் ஒப்படைத்துள்ளனர். பெரும்பாலானவர்கள் முகவரி மாறிச் சென்றது போன்ற காரணத்தால் விநியோகம் செய்யமுடியவில்லை. கைவசம் இருந்த இந்த அட்டைகளை ஊழியர்கள் சிலர் குப்பையில் வீசியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT