பெருங்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(24). நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த ஜெயக்குமார் பெருங்குடி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேர் அவரை தாக்கி, அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் ஜெயக்குமார்.
பெருங்குடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனே பேருந்து நிறுத்த சுற்றுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் செல்வதை பார்த்து அவர்களை வழிமறித்து விசாரித்ததில் அவர்கள்தான் ஜெயக்குமாரிடம் செல்போனை பறித்து சென்றது தெரிந்தது. உடனே 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், 3 பேரும் திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது சலாம் (21), முகமது அலிபாஜி (20), சையது முஸ்தபா (19) என்பது தெரிந்தது. இவர்கள் துரைப்பாக்கம், பெருங்குடி உட்பட சென்னையில் பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.