தமிழகம்

ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக எழும்பூரில் உள்ள நீதிமன்றங்கள் மூர் மார்க்கெட் வளாகத்துக்கு மாற்றம்: எழும்பூரில் புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடக்கம்

செய்திப்பிரிவு

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்பட இருப்பதால் அங்கு செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் அனைத்தும் ஜூலை 1-ம் தேதி முதல் சென்னை மூர் மார்க்கெட் (அல்லிக்குளம்) வளாகத்துக்கு மாற்றப்பட உள்ளன.

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கூடுதல் நடுவர் நீதிமன்றம், பொருளாதார குற்றப் பிரிவு நீதிமன்றங் கள், விரைவு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

அங்கு நூற்றாண்டு பழைமையான கட்டிடம் மற்றும் பல்வேறு சிறு கட்டிடங்களில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன நீதிமன்ற வளாகத்தை அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களும், நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ரூ.10.88 கோடியில் பணிகள்

இந்நிலையில் அவ்வளாகத்தில் கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி மற்றும் நவீன நீதிமன்ற வளாகம் கட்டும் பணி ரூ. 10 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் விரைவில் தொடங்க உள்ளது. இப்பணி 15 மாதங்களில் முடிக்கப்படும்.

இதையொட்டி, எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்களை மூர் மார்க்கெட் (அல்லிகுளம்) வளாகத்தில் உள்ள கட்டிடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அது தொடர்பான கூட்டம் எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிபதி ஏ.முருகன் தலைமை வகித்தார். அவ்வளா கத்தில் உள்ள பல்வேறு நீதிமன்ற நீதிபதிகள், பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) அதிகாரிகள், எழும்பூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சந்தன்பாபு, செயலர் துரைகண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய வளாகம் கட்டும்வரை..

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்க செயலர் துரைகண்ணன் கூறும்போது, “எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் நீதிமன்றங்கள் அனைத்தையும் ஜூலை 1-ம் தேதி முதல் படிப்படியாக மூர் மார்க்கெட் வளாகத்தில் உள்ள 2 மற்றும் 3-வது மாடிக்கு மாற்றுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வரை, மூர் மார்க்கெட் வளாகத்தில்தான் நீதிமன்றங்கள் செயல்படும்” என்றார்.

SCROLL FOR NEXT