தமிழகம்

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

இந்திய அரசால் 1954 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது நலன், குடிமைப் பணி, வணிகம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் செய்யப்பட்ட தனித்துவமான சாதனைகள் அல்லது பணிகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது சாதி, தொழில், தகுதி அல்லது பாலினம் ஆகியவற்றில் வேறுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

2015-ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள விருதுக்கு தகுதியாளர்களைத் தெரிவு செய்வதற்கான விவரக் குறிப்புகளை உரிய படிவத்தில் கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அரசு முதன்மைச் செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 எனும் முகவரிக்கு 31.07.2014-க்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் இந்த அறிவிப்பை http://www.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் இவ்விருதிற்கென அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு நடுவண் அரசுக்குப் பரிந்துரை செய்யப்படுவர் என புதன்கிழமை வெளியான மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT