தமிழகம்

ஐஐடி மாணவர் அமைப்பு தடை நீக்கம்: கருணாநிதி வரவேற்பு

செய்திப்பிரிவு

ஐ.ஐ.டி. மாணவர் அமைப்பு மீதான தடை நீக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "31-5-2015 அன்று நான் விடுத்த அறிக்கையில், “சென்னை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் உள்ள "அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்" என்ற மாணவர்கள் அமைப்பு குறித்து, யாரோ ஒருவர் அனுப்பிய அநாமதேய - “மொட்டைக் கடிதத்தின்" காரணமாக, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை, சம்பந்தப்பட்டோரிடம் எந்தவித விளக்கத்தையும் கேட்டுப் பெறாமல், அந்த அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனால் அமைதியாக இயங்கி வந்த அந்த நிறுவனம் தற்போது போராட்டக் களமாக மாறியுள்ளது.

எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாக பிரதமர் நேரடியாகத் தலையிட்டு, சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் அமைதியையும், ஆரோக்கியமான கல்விச் சூழலையும் நிலைநாட்ட உதவிடுவதோடு, அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிட ஆவன செய்திட வேண்டுமென்றும்" கேட்டுக் கொண்டிருந்தேன்.

என்னைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த வேறு பல கட்சிகளின் தலைவர்களும் இது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அந்த நிறுவன இயக்குனருக்கு நேரடியாகக் கடிதமே எழுதியிருந்தார்.

தி.மு.கழகம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இவைகளின் விளைவாக நேற்றையதினம் ஐ.ஐ.டி. நிர்வாகம் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடையினை நீக்கியதோடு, சுயேச்சையான அமைப்பாக அது செயல்பட அனுமதி அளித்திருப்பதாக இன்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

ஐ.ஐ.டி. நிர்வாகத்தின் இந்த முடிவினை தி.மு. கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, மாணவர்களின் இந்தப் போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த, போராடிய அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT