தமிழகம்

மீன்வளக் கல்லூரி, ஸ்பெயின் பல்கலை. இடையே கல்வி, ஆராய்ச்சித் துறையில் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிக்கும், ஸ்பெயின் பல்கலைக்கழகத்துக்கும் இடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஸ்பெயின் நாட்டிலுள்ள லாஸ் பால்மாஸ் டி கிரான் கெனேரியா பல்கலைக்கழக பேராசிரியர் ரோஸாரியோ பெரியல், ஐரோப்பிய ஆராய்ச்சி பகுதி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஈகோ-அக்வா திட்டத் தலைவர் சதாசிவம் கவுசிக், நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சிக் குழு இயக்குநர் மேரிசோல் இஷ்குயர்டோ, பல்வகைமை பாதுகாத்தல் ஆராய்ச்சிக் குழு இயக்குநர் ரிகார்டோ ஹாரோன் ஆகியோர் ஸ்பெயின் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

கல்வி மற்றும் கலாச்சார பகிர்வு, உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சியில் வளர்ச்சி காணுதல், முதுநிலை மீன்வள மாணவர்கள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் பரிமாற்றம், கல்விக்கான தகவல்கள் மற்றும் வெளியீடுகள் பரிமாற்றம், கூட்டு முயற்சியில் ஆராய்ச்சி திட்டங்கள், கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்துதல், பரஸ்பர ஆர்வம் கொண்ட ஆசிரியர்கள் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல் ஆகிய பிரிவுகளில் இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டங்களில் 3 ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.

இக்குழுவினர் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை பார்வையிட்டனர். வர்த்தக இறால் பண்ணைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஸ்பெயின் நாட்டு மீன்வளத் திட்டங்களில், தங்கள் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு குறித்து, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

`இப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதுநிலை மாணவர்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சியில் ஆராய்ச்சி திட்டங்கள் நிறைவேற்றுதல் முதலியவற்றுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுவோம்’ என, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் கோ.சுகுமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT