ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து 2 நாளில் முடிவு எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சேப்பாக்கம் பகுதி முன்னாள் திமுக கவுன்சிலர் பி.டி.சிவாஜி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியதாவது:
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருந்த சிவாஜி போன்றவர்கள் பாஜகவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இணைந்துள்ளனர். இந்த நம்பிக்கை வீண் போகாது. பெண்கள் அதிக அளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழக அரசியலில் மாற்று சக்தியாக பாஜக வளர்ந்து வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம். கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பாஜகவின் மற்ற தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. அதிகார பலம், பண பலத்தின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. இதனால் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஐஐடி பிரச்சினையை அரசியல் கட்சிகள் பெரிதுபடுத்தி வருகின்றன. பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாலேயே குறிப்பிட்ட மாணவர் வட்டம் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம் என அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.