மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாஜகவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழா டெல்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற கொள்கை முடிவின் அடிப்படையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதையேற்று அவரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமை ஆணையரின் போர்க்குற்ற விசாரணையை எதிர்கொண்டுள்ள ராஜபக்சேவை பெருமைமிக்க இந்த விழாவுக்கு அழைப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்சேவை அழைக்கும் முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
ராஜபக்சேவின் வருகைக்கு பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிரதான கட்சிகளான மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த விஜயகாந்தின் தேமுதிக இதுவரை கருத்து எதுவும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.