வியாசர்பாடி, மாதவரத்தில் 3 வீடுகளில் நகை மற்றும் பணம் திருட்டுப் போனது.
சென்னை மாதவரம் அசிசி நகரை சேர்ந்தவர் நாராயணன். திருவொற்றியூரில் ஒரு கோயிலில் பூசாரியாக இருக்கிறார்.
இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டுக்குள் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து மாதவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் முதலாவது தெருவில் வசிப்பவர் ரஞ்சிதம் (70). இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டருகே உள்ள சந்தைக்கு காய்கறி வாங்கச் சென்றிருந்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தன.
சாஸ்திரிநகர் 2-வது தெருவில் வசிக்கும் முருகன் என்பவரின் வீட்டிலும் ஆள் இல்லாத நேரத்தில் 6 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போனது.
இந்த 2 திருட்டு வழக்குகள் குறித்தும் எம்.கே.பி.நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.