இரவில் விபத்துகள் அதிகமாக நடைபெறும் என்ற பொதுவான கருத்து நிலவும் சூழலில், மதிய நேரத்தில், அதுவும் மதிய உணவுக்கு பின்னுள்ள காலத்தில் விபத்துகள் அதிகமாக நடைபெறுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 1993-ல் 34,925 விபத்துகள் நடைபெற்றன. இந்த விபத்துகளில் 7,349 பேர் உயி ரிழந்தனர். 20 ஆண்டுகளில் அதா வது 2013-ல் தமிழகத்தில் 66,238 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,563 ஆகும்.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 50 நக ரங்களில் 1,20,292 சாலை விபத் துகள் நடைபெற்றுள்ளன. இந்த விபத்துகளில் 17,007 பேர் உயிரி ழந்துள்ளனர். 80,380 பேர் காய மடைந்தனர். இந்த 50 நகரங்களின் பட்டியலில் ஆக்ரா, ஆமதாபாத், அலகாபாத் நகரங்கள் முதல் 3 இடங்களிலும், சென்னை, கோவை நகரங்கள் 10, 11-வது இடங்களிலும், மதுரை, திருச்சி நகரங்கள் 32, 36-வது இடங்களிலும் உள்ளன.
காலம் காலமாக இரவிலும், அதிகாலையிலும்தான் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகிறது என் பது பொதுவான கருத்தாக உள் ளது. ஆனால், தற்போது மதிய உணவுக்கு பின் , பகல் 3 முதல் மாலை 5 மணி வரையிலான கால கட்டத்தில் அதிக விபத்துகள் நடைபெறுவது மாநில குற்ற ஆவணப் பிரிவு (எஸ்.சி.ஆர்.பி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த ஆய்வில் நூறு விபத்து களில் அதிகாலை 6 முதல் 9 மணி வரை 11.3 சதவீதம், காலை 9 முதல் பகல் 12 மணி வரை 15.8 சதவீதம், பகல் 12 முதல் நன்பகல் 3 மணி வரை 15.4 சதவீதம், நன்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை (மதிய உணவுக்குப் பிந்தைய காலம்) 17.1 சதவீதம், மாலை 6 முதல் இரவு 9 மணி வரை 16.9 சதவீதம், இரவு 9 முதல் நள்ளிரவு 12 மணி வரை 10.6 சதவீதம், நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3 மணி வரை 6.1 சதவீதம், பின்னிரவு 3 முதல் அதிகாலை 6 மணி வரை 6.8 சதவீத விபத்துகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெ.பாஸ்கரன் கூறியதாவது:
வாகனங்களை ஓட்டிச் செல்வோரிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும். இது இருந்தாலே பாதி விபத்துகளை குறைத்துவிடலாம். நான் முந்தி, நீ முந்தி என ஈகோ பார்த்து போட்டி போடும்போது விபத்துகள் அதிகரிக்கின்றன. மோட்டார் வாகன சட்ட விதிகளை பின்பற்றியும், சாலை விதிகளை மதித்தும், சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்களை மதித்தும் நடந்தால் விபத்துகள் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன. விபத்தை தவிர்க்கும் வல்லமை தனிமனித ஒழுக்கத்துக்கு உண்டு.
மதிய உணவுக்கு பிந்தைய காலத்தில் அதிக விபத்துகள் நடை பெறுவது ஆய்வில் கண்டு பிடிக் கப்பட்டுள்ளது. இதற்கு உணவு கட்டுப்பாடு அவசியம். மதியம் வாகனம் ஓட்டும் நிலை வந்தால், மதியம் குளிர்ச்சியான, அளவான உணவு சாப்பிட வேண்டும். மதிய உணவுக்கு பின் லேசான உறக்கம் வருவது பொது வானது. உறக்கம் வருகிறது எனத்தெரிந்தால், வாக னத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் வாக னத்தை இயக்கலாம். இதனால் விபத்துகளை நிச்சயம் குறைக்க முடியும் என்றார்.
விபத்து அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் நரேந்திரநாத் ஜனா கூறும்போது, இரவில் தூக்க மின்மை காரணமாகவும், மதிய நேரத்தில் அதிகமாக சாப்பிடு வதாலும் விபத்துகள் நடைபெறு கின்றன. மதிய வேளையில் நீண்ட தூரத்துக்கு வாகனம் ஓட்டிச் செல்வதாக இருந்தால் குறைவாக உணவு எடுக்க வேண்டும். வெயில் காலங்களில் மதிய நேரங்களில் பயணிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பர். அப்போது ஓட்டுநர் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வாகனம் ஓட்டினால் தூக்கம் தானாக வரும். வெயிலால் பார்வையும் தெளிவாக இருக்காது. இதனால் மதிய நேரத்தில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.
30 ஆண்டுகளாக தனியார் வாகன ஓட்டுநராக பணிபுரியும் பி.வெற்றிவேல் கூறும்போது, ‘‘சொந்தமான வாகனம் வைத்திருப்பவர்கள் மதிய நேரத்தில் நன்றாக சாப்பிட்டுவிட்டு, முழு ஏசியை வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்கும்போது தூக்கம் தானாக வரும். அப்போது விபத்துகள் நடைபெறுகின்றன. வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் வயிறு முட்ட சாப்பிட்டாலும் தூக்கத்தை கலைக்க பாக்கு போன்றவற்றை வாயில் போட்டு சாப்பிட்டு சமாளிப்பார்கள் என்றார்.
அரசு வாகன ஓட்டுநர்கள் பி.தங்கராஜ், பி.முத்துப்பாண்டி ஆகியோர் கூறும்போது, ‘‘நகரப் பேருந்துகளை ஓட்டும்போது அந்தப் பிரச்சினை ஏற்படுவதில்லை. ஏனெனில் காலையில் பணிக்கு வந்தால் மதியம் பணி முடிந்துவிடும். அதே நேரத்தில் காலையிலிருந்து மாலை வரை ஓய்வின்றி பணியாற்றும்போது மதிய நேரத்தில் விபத்துகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. மதிய நேரத்துக்கு பணிக்கு செல்லும்போது, பஸ் ஓட்டும்போது தூக்கத்தை தவிர்க்க குறைந்த அளவே சாப்பிடுவோம்’’ என்றனர்.
விபத்துகளை தடுக்க சாலை யோர கிணறுகளை மூடக்கோரி வழக்கு தொடர்ந்த மதுரை சம உரிமைகள் அமைப்பின் இயக்குநர் சி.ஆனந்தராஜ் கூறும்போது, ‘‘இரவு நேரத்தில் வாகனங்களை மெதுவாக ஓட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மதிய நேரத்தில் அதிக விபத்துகள் நடைபெறுவதற்கு உணவு ஒரு காரணமாக இருந்தாலும், அந்த நேரத்தில் ஏற்படும் வாகன நெரிசல், வாகனத்தை வேகமாக இயக்குவது போன்ற காரணங்களும் உள்ளன’’ என்றார்.