தமிழகம்

கொங்கு மண்டல மாநாடு பேரவை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பாமக தலைவர் ஜி.கே.மணி தகவல்

செய்திப்பிரிவு

கோவையில் நடைபெற உள்ள பாமகவின் கொங்கு மண்டல மாநாடு, சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

கோவையில் பாமக சார்பில் கொங்கு மண்டல மாநாடு வரும் ஜூலை 12-ம் தேதி கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ளும்படி ஜி.கே.மணி தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள், கோவை கிராஸ்கட் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்குடன் அழைப்பிதழ்களை நேற்று வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி வழங்கப்பட வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடு நடத்தப்படுகிறது.

கோவையில் நடைபெறும் இந்த மாநாடு அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது தமிழர்களின் மரியாதைக்குரிய செயல் என்பதால் பொதுமக்கள் அனைவருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்படுகிறது.

கோவை மட்டுமின்றி கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட 6 மாவட்டங்களிலும் பொதுமக்களுக்கு பாமக சார்பில் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பு விடுக்கப்படும்’ என்றார்.

SCROLL FOR NEXT