‘இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முதல்வருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆர்.கே.நகரில் 27-ம் தேதி (நாளை) இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் நான் போட்டியிடுகிறேன். எப்போதும் என் மீது எல்லையில்லாத அன்பும், அக்கறையும் கொண்டிருக்கும் ஆர்.கே.நகர் வாக்காளர் கள் அனைவரும் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு எதிராக பின்னப்படுகிற அரசியல் சதி வலைகளையும், எண்ணற்ற தாக்குதல்களையும் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் நன்கு அறிவர். விதியும், சதியும் செய்த சூழ்ச்சியால் இந்த இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட நான், தமிழக மக்களுக்காக என் வாழ்வை அர்ப்பணித்துள்ளேன். இதனாலேயே அரசியலில் நுழைந்த நாள் முதல் எனக்கு எதிராக சொல்லொண்ணா வேதனை தரும் பல கொடுஞ்செயல்களை எனது அரசியல் எதிரிகள் செய்த வண்ணம் உள்ளனர். என் மீது நீங்களும், உங்கள் மீது நானும் கொண்டிருக்கும் பற்றும் பாசமும்தான் தொடர்ந்து என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அன்பின் காரணமாகவே மீண்டும் மீண்டும் உங்களிடம் வருகிறேன். அன்பைப் பெறுகிறேன்.
தமிழக மக்களுக்கு நாடே போற்றும் நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதை அறிவீர்கள். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் வசந்தம் வீசிடச் செய்ய வேண்டும் என்ற லட்சியத்துக்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
எம்.ஜி.ஆர். வகுத்த அரசியல் பாதையில் நாம் இன்னும் பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக மாற்ற, ஆர்.கே.நகரில் என்னை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களாகிய உங்களை கடந்த 22-ம் தேதி பல்வேறு இடங்களில் நேரில் சந்தித்து வாக்குகள் கேட்டேன். அப்போது நீங்கள் எனக்கு அளித்த உற்சாக வரவேற்பையும், உளப்பூர்வமான ஆதரவையும் கண்டு பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைகிறேன். உங்களுக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.