தமிழ் மரபில் செழித்தோங்கியிருந்த நாடகக் கலை மரபை மீட்டெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது மாற்று நாடக இயக்கம்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறையின் ஒருங்கிணைப்பில் கடந்த 13 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு நாடக பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறது மாற்று நாடக இயக்கம். இந்த அமைப்பின் தலைவரும், கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியருமான கி.பார்த்திபராஜா தனது அனுபவங் களை ’தி இந்து’வுக்காக பகிர்ந்து கொள்கிறார்:
நான் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே யுள்ள செருவாக்கோட்டை கிராமம். எங்கள் ஊரில் நாடகம் நடத்த வரும் கலைஞர்களுக்கு எப்போதும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. சாதாரண மனிதர்களாய் இருக்கும் நாடகக் கலைஞர்கள் ஒப்பனை செய்து கொண்டு, மேடையேறி பாட்டு, நடிப்பு, இசையென வேறொரு பரிமாணத் தோடு வெளிப்படுவதை அருகிருந்து வியந்து பார்த்தவன் நான். அந்த இள வயது தாக்கம் பின்னாளில் பள்ளி கல்லூரிகளில் படித்தபோதும் எனக்குள்ளான நாடக ஆர்வத்தை அணையாமல் காத்தது. நானும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தபோது பேராசிரியர் வீ.அரசுவின் அறிமுகமும், நாடகக் கலையில் அ.மங்கை, பிரசன்னா ராமசாமி, ஞாநி, பிரளயன் போன்றோரின் நட்பும் கிடைத்தது எனக்கு கூடுதல் உற்சாகத்தைத் தருவதாய் அமைந் தது. 2003 ல் திருப்புத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நாடகப் பயிற்சிக் கென சென்றேன். பிறகு, அந்தக் கல்லூரியிலேயே தமிழ்த் துறையில் பணி செய்யும் வாய்ப்பும் அமைந்தது. அருட்தந்தை அ.மரியசூசை அடிக ளாரால் அதே ஆண்டிலேயே தொடங் கப்பட்டதுதான் இந்த மாற்று நாடக இயக்கம்.
கல்வியில் நாடகத்தைப் பயன் படுத்துவதற்கான தேடலோடு தொடங் கப்பட்ட இந்த அமைப்பில்,மாணவர் களுக்கு நாடகப் பயிற்சிகள், பயிற்சியி னூடாக ஆளுமைத் திறன் வளர்த்தல், அவ்வப்போது நிகழும் சமுதாயப் போக்குகளைப் பிரதிபலிக் கும் நாடகங்களை தயாரித்தல் என தொடர்ச்சியாக செயல்பட்டு வருகி றோம். இதுவரை எங்களது பயிற்சிப் பட்டறைகளில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றிருக் கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்திய கருத்துகளை நாடகங்களாக்கி வருகிறோம். நிலத்தடி நீர்மட்டம் வேகமாய் குறைந்துவரும் இன்றைய காலச்சூழலை கருத்தில் கொண்டு ‘நீர் காக்க…’ எனும் நாடகத்தை பிரளயன் தலைமையிலான குழுவினர் உருவாக்கினர்.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன் பாடு பெருகி, அதனால் விளையும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை விளக்கும் ‘பிளாஸ்டிக் மனிதர்கள்’ எனும் நாட கத்தை எனது தலைமையிலான குழு தயாரித்தது. இப்படியாய் உருவான நாடகங்களை முதலில் பயிற்சி மாணவர்கள் மத்தியில் நடத்திக் காட்டுவோம். பிறகு, பொதுமக்கள் பார்க்கும் வகையில் திறந்தவெளி மேடையில் அரங்கேற்றுவோம்.
எங்களது பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தின் மிகச் சிறந்த நாடக ஆளுமைகளான பேராசிரியர்கள் சே.இராமானுஜம், மு.ராமசாமி, கே.ஏ.குணசேகரன், இரா.ராஜூ, பிரளயன், அ.மங்கை, பிரசன்னா ராமசாமி போன்றோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்திருக் கிறார்கள். திரைக் கலைஞர்களான நாசர், ரோகிணி, பசுபதி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களோடு கலந்துரையாடி இருக்கிறார்கள்.
நாடகப் பயிற்சியில் ஈடுபடும் ஒரு கலைஞன் தன் உடல், மொழி, குரல் என அனைத்தையும் ஒருமுகப் படுத்த பயிற்சி தருகிறோம். மேலும், தனது சுய சிந்தனையை வளர்த்துக் கொள்வதோடு, இந்த சமுதாயத்தின் கூட்டு முயற்சியில் நம்பிக்கையுள் ளவர்களாக இன்றைய இளைஞர்களை உருவாக்குகிற வேலையையும் செய்து வருகிறோம். உதிரி கலாச்சாரத்தை மனிதன் விட்டொழித்து, கூட்டுக் கலாச்சாரத்துக்கான ரசனையைப் பெறுகிறான். என்று தனது நாடக அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் கி.பார்த்திபராஜா.