ஜல்லிக்கட்டுக்கு தடை விதித் ததை எதிர்த்து அலங்காநல்லூரில் பல இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களின் பல கிராமங்களில் நடைபெற்றாலும், அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான் உலகப் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் தை 3-ம் தேதி அலங்காநல்லூரில் நடை பெறும் ஜல்லிக்கட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பல்லாயிரம் பேர் திரள்வது வழக்கம்.
இவ்வளவு புகழ்பெற்ற ஜல்லிக் கட்டு போட்டியை அலங்காநல்லூ ரில் தமிழக அரசே முன்னின்று நடத்தி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து புதன்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வெளியான சிறிது நேரத்திலேயே ஜல்லிக்கட்டு கமிட்டி முன்னாள் உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் மாடுபிடி வீரர்கள், காளை வளர்ப்போர் உள்பட பலர் அலங்காநல்லூர் மைதானத்துக்கு திரண்டு வந்து, தடையைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
அதன்பின் வாடிவாசல், ஜல்லிக்கட்டு மைதானம், பார்வையாளர்கள் கேலரி, வீதிகள் என பல இடங்களில் கருப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதையடுத்து, முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக டி.எஸ்.பி. சாந்தசொரூபன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் அலங்கா நல்லூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.