குற்றாலம் அருவிகளில் வெள்ளம் காரணமாக பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று மாலை 5.30 மணிக்குப் பிறகு குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் மழையால் குற்றாலம் அருவிகளில் மிதமாக தண்ணீர் விழுந்தது. பிற்பகலில் இருந்து இடைவிடாது சாரல் மழை பொழிந்து இதமான சூழல் நிலவியது. நேற்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
நேற்று நண்பகலுக்குப்பின் குற்றாலம் மலைப் பகுதியில் திடீரென கடும் மழை பெய்தது. அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அருவியிலும், ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டதால் மாலை 5.30 மணிக்கு பிறகு பிரதான அருவியிலும், ஐந்தருவியிலும் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
குற்றாலத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீஸன் தொடங்கியிருந்த போதிலும், முதன்முறையாக நேற்றுதான் அருவிகளில் வெள்ளம் காரணமாக குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.