தமிழகம்

விற்பனையில் சரிவு எதிரொலி: ஆய்வு நடத்த டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

எம்.மணிகண்டன்

டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் சமீப காலமாக குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அதன் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) மகேஷ்வரன் கடந்த வாரம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக “மது விற்பனை குறைந்ததற்கு காரணம் என்ன என்பதை கண்டு பிடிக்க வேண்டும். அதற்காக மண்டல மேலாளர்கள் டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய மண்டலங்களுக்கான மேலாளர்கள் அந்தந்த மண்டலத் துக்குட்பட்ட கடைகளில் வாரம் 2 தினங்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வின் போது விற்பனை நிலையங்களில் உள்ள குறைபாடுகள், சேமிப்பு கிடங்குகளின் நிலை, மது பொருட்களை வாகனங்களில் ஏற்றி இறக்கும் நிகழ்வுகள், அனுமதியில்லாமல் இயங்கும் பார்கள், ஊழியர்களின் நடத்தை உட்பட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ( ஏஐடியுசி) தனசேகரன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “டாஸ்மாக்கில் விற்பனை குறைந்துள்ளது உண்மைதான். அனுமதியற்ற பார்கள், வெளிநாட்டு மது வகைகளின் ஊடுருவல், போலி மதுவகைகளின் வரவு, வாங்கும் சக்தி குறைந்தது என்று இதற்கு பல்வேறு காரணங்கள் உள் ளன.

இதனை அரசு சரி செய்ய வேண்டும். விற்பனை குறைந்ததற்காக ஊழியர்களை குறை சொல்வது நியாயமில்லை. எனினும், வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது” என்றார்.

SCROLL FOR NEXT