தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதமானாலும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ல் தொடங்கும். இந்த ஆண்டில் மே 30-ம் தேதி தொடங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், வங்கக்கடலில் இருந்து கேரளா நோக்கி பருவமழை மெதுவாக நகர்வதால் பருவமழை தொடக்கம் தாமதமாகியுள்ளது. ஜூன் 5-ம் தேதி பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் மேலும் கூறும்போது, “பருவமழை என்பது மழையை மட்டுமே குறிப்பது அல்ல. அதன் தொடக்கம் பல காரணிகளைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. பருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை என்றாலும்கூட, தமிழகம், கேரளம், கர்நாடகாவில் மழை பெய்துகொண்டுதான் இருக்கிறது. இது தொடரும்’’ என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஓசூரில் நேற்று அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவானது. மதுரை, சேலம், தேனி மாவட்டங்களிலும் மழை பெய் துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. வட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.