தமிழகம்

சென்னை மெட்ரோ ரயிலில் சில வாரங்கள் இலவச பயணம்?

சுனிதா சேகர்

சென்னை மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது மெட்ரோ ரயில். இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட சில வாரங்களுக்கு பயணிகள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெட்ரோ ரயில் சேவையை பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும், மெட்ரோ ரயில் சேவையை அடையாளப்படுத்துவதற்காகவும் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இது ஆலோசனைக் கட்டத்தில்தான் இருக்கிறது. இறுதி முடிவு இன்னமும் எட்டப்படவில்லை.

மேலும், சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க குறைந்தபட்சமாக ரூ.10-ம் அதிகபட்சமாக ரூ.40-ம் கட்டணம் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையில் விரைவில் தொடங்க உள்ள மெட்ரோ ரயில் சேவைக்காக கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறை மற்றும் பணிமனையை பத்திரிகையாளர்களுக்கு நேற்று (செவ்வாய்கிழமை) மெட்ரோ ரயில் அதிகாரிகள் சுற்றிக் காண்பித்தனர்.

அப்போது, கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும் எனத் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்த பிறகு விரைவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும். ஆனால், அதற்கான தேதிகள் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை" என்றனர்.

சென்னை மெட்ரோ சில துளிகள்:

ரயில் நிலையங்களுக்கு இடையேயான தூரம்:

வண்ணாரப்பேட்டை - விமானநிலையம் - 23.1 கி.மீ.

சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுன்ட் - 22.0 கி.மீ

நிர்ணயிக்கப்பட்ட திட்ட செலவு: ரூ.14,600 கோடி

முதற்கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 9 ரயில்கள் இயக்கப்படும். இவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம் 9.5 கிலோ மீட்டர்.

கோயம்பேடு-ஆலந்தூர் இடையே உள்ள 9.5 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடங்களில் சென்றடையும்.

பயணிகள் எண்ணிக்கை: ஒவ்வொரு ரயிலிலும் 1,200 பயனிகள் ஒரே நேரத்தில் பயணிக்கலாம்

அதிகபட்ச வேகம்: மணிக்கு 80 கி.மீ.

ரயில் இயக்கப்படும் வேகம்: மணிக்கு 35 கி.மீ.

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நிற்கும் நேரம்: 30 நொடிகள்

காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை ரயில்கள் இயக்கப்படும்

சில சிறப்பம்சங்கள்

1. மெட்ரோ ரயில்களை நாள்தோறும் இயக்க கால அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து உச்ச நேரங்களைக் கருத்தில் கொண்டு ரயில்களின் புறப்பாடு திட்டமிடப்பட்டுள்ளது.

2. அவசர நேரங்களில், ஒரு பயணி தனது ரயில் ஓட்டுநரை தொடர்புகொள்ள முடியும். ரயில் நிலையத்திலோ அல்லது ரயில் பாதையிலோ ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். இதற்காக, ‘எமர்ஜென்சி டிரிப்பிங் ஸ்விட்ச்’ அமைக்கப்பட்டுள்ளது. அவர், அருகாமையில் இருக்கும் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

3. ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர் (OCC) செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறையில் தான் சென்னை மெட்ரோ ரயில் இயக்கம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.

4. செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு அறையில் தற்போது 7 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

5. ஓட்டுநருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் எமர்ஜென்சி பிரேக் மூலம் ரயிலை நிறுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

6. ஆபரேஷன் கண்ட்ரோல் சென்டர் (OCC)-ல் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் ரயில் கட்டுப்பாடு உடனடியாக அசோக்நகர், கோயம்பேடு ரயில் நிலையங்களுக்கு மாற்றப்படும்.

7. ரயில்கள் இயக்கத்தை தானியங்கி முறையிலும், ஓட்டுநரை வைத்து இயக்கியும் சோதிக்கப்பட்டுள்ளது.

8. ரயில் ஓட்டுநர்கள் இல்லாமலும் ரயிலை இயக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில காலத்துக்கு ஓட்டுநர்களைக் கொண்டே மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

SCROLL FOR NEXT