ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டி யிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் யார் என்பது ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. வேறு சில கட்சிகளும் போட்டி யிடுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் இடதுசாரிக் கட்சிகள் வேட்பாளரை நிறுத்துவது என முடிவு செய்தன.
இருப்பினும் தேர்தலில் களமிறங் குவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில் இருகட்சிகளும் ஆலோசனை நடத்தி வந்தன. இதன் ஒருபகுதியாக நேற்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டமும், மாநிலக்குழுக் கூட்டமும் நடந்தது. இதில் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டன. அதன் பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மார்க் சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசி னார். இதில் உடன்பாடு எட்டப்பட்ட தையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜனநாயகத்தில் தேர்தலை புறக்கணிப்பது ஆரோக்கிய மானதல்ல. ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். அடுத்த இரண்டு நாட்களில் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கூடி வேட்பாளரை இறுதி செய்து அறிவிக்கும். தேர்தல் பிரச்சாரத்துக்கு அகில இந்திய தலைவர்கள் வருகை குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்திருக்கும் ஜெயலலிதா போட்டியிடும் இந்த தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மதச்சார்பின்மை, சமூக ஒடுக்குமுறைகள், புதிய தாராளமய கொள்கைகள், ஊழல் எதிர்ப்பு ஆகிய எங்கள் கொள்கைகள் மீது நம்பிக்கையுள்ள மக்கள் எங்க ளுக்கு வாக்களிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் தேர்தலை நியாயமாக நடத்தும் என்று நம்புகிறோம். தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்றால், அதை மக்கள் மத்தியில் நிச்சயமாக அம்பலப்படுத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதனிடையே இந்திய கம்யூ னிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.