காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் குறித்த தேதியில் அணை திறக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால், அணை திறக்கப்படுமா, இல்லையா, என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில், மேட்டூர் அணையில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் குறுவை சாகுபடிக்கு அணையை திறக்க இயலாது எனத் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, பம்ப் செட்டுகள் மூலம் குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதை விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் வரவேற்றும், எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பவித்திரமாணிக்கம் காமராஜ் கூறியபோது, “கடந்த பல ஆண்டுகளாகவே குறுவை சாகுபடி கைவிடப்பட்டு வருகிறது. காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி காலமே சிறந்தது. இதில்தான் அதிக மகசூல் கிடைக்கும். ஆனால், கர்நாடகத்திடமிருந்து தமிழகத்தின் உரிமையான காவிரி நீரைப் பெற தமிழக அரசு உரிய முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. இது, கண்டனத்துக்குரியது. குறுவை பொய்த்த காலத்தை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு காவிரி நீரைப் பெற்றுக்கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் பிரச்சினை இல்லாமல் சாகுபடி மேற்கொள்ள முடியும்” என்றார்.
காவிரி டெல்டா விவசாயிகள் குழுமப் பொதுச் செயலாளர் வெ.சத்தியநாராயணன் கூறியபோது, “முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பில் குறுவை சாகுபடிக்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம், இலவச ஜிப்சம், உயிர் உரங்களுக்கு சலுகை உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது” என்றார்.
காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் சுவாமி மலை விமலநாதன் கூறியபோது, “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் எந்தவித அரசியல் தலையீடும், குறுக்கீடுகளும், பாகுபாடுகளும் இல்லாமல் பம்ப் செட் உள்ள அனைத்து விவசாயி களுக்கும் வழங்க வேண்டும். இப்போது மட்டு மல்ல, எதிர்காலத் தில்கூட, குறுவைக்கு தண்ணீர் திறக்காத காலத்தையெல்லாம் வறட்சி பாதித்த காலமாக அறிவித்து, அதற்கான நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். அதை, நிரந்தர அரசாணையாகவே இயற்ற வேண்டும்.
குறுவை கைவிட்டதால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி இழப்பு ஏற்படுகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் இழப்புகள் தனி. அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும். இதுபோன்ற இடர்பாட்டுக் காலங்களை மத்திய அரசு வறட்சிக் காலங்களாக அறிவிக்க வேண்டும்.
பம்ப் செட் உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்புத் தொகுப்பு அளிக்கப்படுகிறது. குறுவையை கைவிட்ட பம்ப் செட் இல்லாத அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.