தமிழகம்

ராமதாஸ் அறிக்கைகள் 5 தொகுதிகளாக விரைவில் வெளியீடு

எஸ்.நீலவண்ணன்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் பவழ விழா நிறைவு வெளியீடாக அவரது அறிக்கைகள் 5 தொகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்தில் 1938 ஜூலை 25-ல் பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தார். எம்பிபிஎஸ் படித்து சில காலம் அரசு மருத்துவராக பணியாற்றிய அவர் வன்னியர் சங்கத்தை தொடங்கினார். அதன் பரிணாம வளர்ச்சியே தற்போதைய பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சியின் நிறுவனராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 24-ம் தேதி அன்று தனது 50-வது திருமண நாளை பொன்விழாவாக திண்டிவனம் அருகில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், அடுத்த மாதம் அவருடைய பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவில் அவரது அறிக்கை களைத் தொகுத்து வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாமக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது;

ராமதாஸ் 50-வது திருமண நாள் அன்று மகன், மகள், பேரன், பேத்தி மற்றும் உறவினர்கள் வந்திருந்தனர். காலை சிற்றுண்டிக்கு பிறகு தனது பேரன், பேத்திகளை தமிழில் பேச வைத்து அவர்களுடைய ‘ழ’கரம் உச்சரிப்பு சரியாக உள்ளதா என ராமதாஸ் கவனித்தார். பின்னர், ஆடல், பாடல் என குழந்தைகளின் தனி திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்தன.

மதிய உணவுக்கு பிறகு பாமக தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இவர்களை தவிர வெளியாட்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. மாலையில் குடும்பத்தில் உள்ள பெண்களின் திறமைகளை கொண்டு வரும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இரவு 10 மணிக்கு பிறகு அனைவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.

அரசியலில் உள்ளூர் பிரச்சினை தொடங்கி, உலக பிரச்சினை வரை அனைத்துக்கும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை அவர் வெளியிட்டுள்ள அறிக்கைகளை 5 தொகுதிகளாக தனது பிறந்த நாளை முன்னிட்டு பவழ விழா நிறைவு வெளியீடாக அவர் வெளியிட உள்ளார். ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் பிறந்த நாளை விமர்சியாக கொண்டாடுவர்.

ஆனால், தன்து குடும்பத்துடன் மட்டும் கொண்டாடும் வழக்கமுடைய ராமதாஸ், முதன்முறையாக தனது பிறந்த நாளில் அறிக்கைகளை தொகுத்து வெளியிட உள்ளார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT