கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரும் வழக்கில் இன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீதும் குற்றம் சாட்டப்படுவதால் இன்றைய விசாரணை கூடுதல் கவனத்துடன் உற்று நோக்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கைலாசபட்டி கைலாசநாதர் மலைக் கோயிலில் பூசாரியாக இருந்தவர் நாகமுத்து. 5.5.2012 இரவு, கோயில் நிர்வாகிகளான வெங்கிடசாமி, பழனிச்சாமி ஆகியோருக்கும் நாகமுத்துவுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் தன்னை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி தாக்கியதாக புகார் கொடுத்திருக்கிறார் நாகமுத்து.
மறுநாள், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர்மன்ற தலைவருமான ஓ.ராஜா, புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி நாகமுத்துவின் தந்தை சுப்புராஜுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகுளம் டி.எஸ்.பியிடம் கொடுத்த புகாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், டி.எஸ்.பி. உமாவும் எதிரிகளுக்கு ஆதரவாக பேசி தன்னை மிரட்டுவதாக 7-5-2012ல் தேனி எஸ்.பிக்கு புகார் அனுப்பியிருக் கிறார் நாகமுத்து.
இதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பி இருக்கிறார். தனது புகார்களுக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யக் கோரி ‘எவிடென்ஸ்’ அமைப்பின் உதவியுடன் உயர் நீதிமன்ற கிளையில் வழக்கும் தொடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, பழனிச்சாமி, வெங்கிடசாமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2-9-2012ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நாகமுத்து, 7-12-2012 அன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘என் மரணத் துக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாதான் காரணம். என் மீது திருட்டுப் பழியையும் தீண்டத்தகாதவன் என்கிற பட்டத்தையும் சுமத்திவிட்டார். எனக்கும் என் குடும்பத்துக்கும் காவல்துறை பாதுகாப்பு தரவில்லை. அதனால், என் மரணத்தையே பாதுகாப்புக்காக அர்ப்பணிக்கின்றேன். காரணம் ஓ.ராஜா, மணிமாறன், வி.எம்.பாண்டி, சிவக்குமார், ஞானம், லோகு, சரவணன்’ இப்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
நாகமுத்துவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் குறிப்பிட்டிருந்த 7 நபர்களில் மணிமாறனும் லோகுவும் கைது செய்யப்பட்டனர். ஓ.ராஜா உள்ளிட்ட மற்ற 5 பேர் முன்ஜாமீன் பெற்றனர். இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. விசாரணைக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சுப்புராஜ் வழக்குத் தொடர்ந்ததால் வழக்கை முழுமையாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதனிடையே, நேற்று மாலை பெரியகுளம் ஜே.எம்.1 நீதிமன்றத் தில் நாகமுத்து தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் 61 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணை அறிக்கையை பெரியகுளம் டி.எஸ்.பி. உமாமகேஸ்வரன், இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார். மறு விசாரணையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி அவர்களது சாட்சியங்களை பதிவு செய்திருக்கிறார். இதனால் இன்று இந்த வழக்கில் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய சுப்புராஜின் வழக்கறிஞர் அழகுமணி, “ஓ.ராஜா போலீஸ் இலாகாவை கையில் வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி என்பதால் நடவடிக்கை எடுக்கத் தயங்கியது போலீஸ். ஓ.ராஜா உள் ளிட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருக் கிறது’’ என்றார்.
சுப்புராஜுக்கு சட்ட நடவடிக்கைகளில் உதவிவரும் ‘எவிடென்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் இதுகுறித்து பேசும் போது, “கிட்டத்தட்ட 7 மாதங்களாக நாகமுத்து மிரட்டப்பட்டிருக்கிறார் என்பதற்கு அவர் கொடுத்திருக்கும் 7 புகார்களே சாட்சி. வழக்கின் பின்னணியில் இருப்பவர்கள் அதிகார பலம்கொண்டவர்கள் என்பதால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.
ஓ.ராஜா மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளதா? என்று டி.எஸ்.பி. உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது, “இப் போது எதுவும் சொல்ல முடியாது. வழக்கு விசாரணைக்கு வரும்போது இந்த வழக்கின் விசாரணை குறித்தும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிப்போம்’’ என்றார்.