உடல் நிலை சரியில்லாமல் போனதற்கான காரணங்களை விவரித்த திமுக தலைவர் கருணாநிதி, தனது பேரனும் நடிகருமான அருள்நிதியின் திருமண நிகழ்ச்சியில் மிகச் சுருக்கமாக பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் தனது வாழ்த்துரையில் பேசியது:
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு கொள்கைக் கோட்பாடு, செயல்முறை இவைகளில் ஒன்றாக இந்தத் திருமண முறையும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை நான் உங்களுக்கு விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொண்ட காரணத்தினால்தான் பல்வேறு தரப்பிலே உள்ள பெருமக்கள், கட்சிகளின் தோழர்கள், தலைவர்கள், ஸ்டாலின் அனைவரும் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியிருக்கின்றீர்கள்.
மணமக்கள் அருள்நிதி - கீர்த்தனா இருவரும் இன்றைக்கு இல்வாழ்விலே அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்களை நாம் வாழ்த்துகிறோம் என்றால்; எதிர்காலத்தில் வளர வேண்டிய, வாழ வேண்டிய ஒரு தலைமுறையை வாழ்த்துகிறோம் என்று பொருள். அந்தப் பொருளை எண்ணிப் பார்த்து அந்தப் பொருள் விளங்க, தமிழ்நாட்டில் இதுவரையில் நாம் இந்தச் சமுதாயம் மேன்மைப்படுவதற்காக ஆற்றிய பணிகளையெல்லாம் எண்ணிப் பார்த்து மேலும் அந்தப் பணிகள் தொடர வேண்டும் என்பதற்கு இன்றைக்கே மனதில் சூளுரை கொள்வோம் என்பதையும் எண்ணிப்பார்த்து, அதற்கேற்ப நடந்து கொள்வதுதான் இந்த மணவிழாவிலே நாம் அனைவரும் கலந்து கொண்டதற்கான பொருளாகும்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை ஓரளவு மறந்து விட்டு அல்ல, மறைத்து விட்டும் அல்ல, துறந்தும் விட்டும் அல்ல, அவைகளையெல்லாம் விலக்கி வைத்து விட்டும் அல்ல, அந்தக் கொள்கைகள் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டு உரையாற்றுவதால் பட்டுப் போய் விடாது என்ற திடமான எண்ணத்தோடு பேசினார்கள். அப்படி இங்கே கருத்துகளை எடுத்துச் சொன்ன உங்களையெல்லாம் நான் பாராட்டவும் நன்றி கூறவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
எனக்கு முன்னால் பேசிய சில பேர் குறிப்பிட்டதைப் போல எனக்கும் உடல் நிலை சரியில்லைதான். உடல் நிலை சரியில்லாததற்குக் காரணம், எனக்கு வயது முதிர்ந்து விட்டது என்பது மாத்திரமல்ல; அலைச்சல் - ஓய்வில்லாத அலைச்சல் - ஓய்வில்லாத உழைப்பு - ஏராளமான பார்வையாளர்கள் - இவைதான் இந்த உடல் நிலை சரியில்லாமல் போனதற்கான காரணம் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
நம்முடைய பேராசிரியர் (க.அன்பழகன்) தன் உடல் நிலையையும் பொருள்படுத்தாமல், இந்த நிகழ்ச்சிக்கு வந்து - ஏற்கெனவே ஒப்புக் கொண்டபடி தலைமையேற்று விழாவினை நடத்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மண மக்களுக்கு அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். மணமக்களைப் போல, மற்றவர்களும் வாழ வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்க - அதற்கான ஆலோசனைகளைக் கூற - வழிமுறைகளை விளக்கத்தான் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். எனவே, அடுத்தடுத்து நமக்குள்ள பணிகள் ஏராளம் இருக்கின்றன.
இங்கே ஒரு சமுதாயம் எப்படி இன்றைக்கு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக - தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறத்தக்க அளவுக்கு ஆகிவிட்ட ஒரு சமுதாயமாக ஆனதோ, அதை ஏற்க மறுத்து, இன்றைக்கு திராவிட நாட்டிலே, தமிழ்நாட்டிலே திராவிட இயக்கத்தினரை தலையெடுக்காமல் செய்வோம் என்றெல்லாம் சூளுரைத்தவர்களுக்கு சூடு போடுகின்ற வகையிலே நாம் நம்முடைய இயக்கத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
பலரும் பல்வேறு கட்சிகளும், கொள்கை வீரர்களும் கூடியிருக்கின்ற இந்த மாமன்றத்தில் நாம் அவை பற்றியெல்லாம் விரிவாகப் பேச விரும்பவில்லை. என்னுடைய உடல் நிலையும் அதற்கு இடம் கொடுக்காது.
ஆகவே, இவைகளையெல்லாம் நான் பேசியதாக உணர்ந்து - இதுவரையில் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்ற இத்தகைய மறுமலர்ச்சித் திருமணங்கள் - சுயமரியாதைத் திருமணங்கள் - தொடர்ந்து நடைபெற - அந்தத் திருமணங்களை ஏற்றுக் கொண்டவர்களின் குடும்பத்தை செழிப்புற செய்ய - இங்கே வந்து வீற்றிருக்கின்ற அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று சூளுரைத்துக் கொண்டு புறப்பட வேண்டுமென்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, இந்த மணமக்கள் இன்று போல் என்றும் வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று கருணாநிதி பேசினார்.