ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய தமிழக ஆலைகளில் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் கரும்பு விவசாயம் அழிவின் விளிம்பில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் கரும்பு விவசாயத்தில் இருந்து வெளி யேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21,000 கோடியாக உயர்ந்துள்ளது. யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல நிலுவைத் தொகையை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 6,000 கோடி வட்டியுடன் கூடிய கடனை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 8.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. விற்பனையாகாமல் கிடங்குகளில் சர்க்கரை தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 900 கோடியை எட்டியுள்ளது.
ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்கான சர்க்கரை கொள்முதல் செய்ய தமிழக அரசு சர்வதேச டெண்டர் கோரியுள்ளது. தமிழக ஆலைகளில் இருந்து சர்க்கரையை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க முடியும்.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சர்க்கரைக்கு 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரையை அதிக விலைக்கு விற்க வேண்டியுள்ளது. எனவே, சர்க்கரை மீதான வாட் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் ஆகியோரை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ. 500 மானியம் வழங்க வேண்டும் என இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.