உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை மற்றும் 2 பெண்கள் உயிரிழந்தனர். புதுமண தம்பதி உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சேகர் (26) என்பவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஓகலூரைச் சேர்ந்த அகிலா(22) என்பவருக்கும் சென்னை திருவொற்றியூரில் உள்ள கோயிலில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து புதுமண தம்பதி மற்றும் உறவினர் களான பிரியங்கா (36), குணசேகரன் (45), அஞ்சலம் (48), நல்லம்மாள் (50), மீனா (8) ஆகியோர் ஒரு காரில் சென்னையில் இருந்து ஓகலூருக்கு சென்று கொண்டிருந்தனர். காரை அம்பத்தூரைச் சேர்ந்த பச்சையப்பன்(40) என்பவர் ஓட்டிச் சென்றார்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் அந்த கார் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார் நிலை தடுமாறி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. பின்னர், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த அஞ்சலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூரைச் சேர்ந்த நல்லம்மாள், புதுமண தம்பதியான சேகர், அகிலா மற்றும் பிரியங்கா, குணசேகரன், குழந்தை மீனா, ஓட்டுநர் பச்சை யப்பன் ஆகிய 7 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நல்லம்மாள், குழந்தை மீனா இருவரும் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, பச்சையப்பன், பிரியங்கா, குணசேகரன் ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து பற்றி திருநாவலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.