தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் வருகிற ஜூலை 5-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார்.
2015-17-ம் ஆண்டுக்கான தேர்தல் குறித்து இயக்குநர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தலில் தலைவர், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர்கள், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள்.
இந்த ஆண்டுக்கான தேர்தல் சென்னை வடபழனியில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்க அரங்கில் ஜூலை 5-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிந்ததும் அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
19-ல் வேட்புமனு தாக்கல்
வேட்பு மனுத்தாக்கல் வருகிற 19-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 23-ம் தேதி நடக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் 26-ம் தேதி வெளியிடப்படுகிறது.
வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து இந்த தேர்தலை நடத்துவார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொரு ளாளர் பதவிக்கு வெ.சேகரும் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது தலைவராக இருந்துவரும் விக்ரமனிடம், மீண்டும் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, “இயக்குநர் சங்க உறுப்பினர்கள் பலரும் நான் மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். முடிவை ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்” என்று தெரிவித்தார்.