தமிழகம்

கோடியக்கரை அருகே நாகை, காரைக்கால் மீனவர்கள் 26 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

செய்திப்பிரிவு

நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண் டிருந்த நாகப்பட்டினம், காரைக் காலைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

நாகப்பட்டினம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த புனிதா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், குமார், பெருமாள் உள்ளிட்ட 8 பேரும், செந்தில் வேலுக்குச் சொந்தமான விசைப் படகில் சிலம்புச்செல்வன், செஞ்சிவேல் உள்ளிட்ட 9 பேரும் கடந்த 19-ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இதேபோல, காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த செல்வ மணிக்குச் சொந்தமான விசைப் படகில் சக்திவேலு, வடிவேலு உள் ளிட்ட 9 பேர் கடந்த 19-ல் கடலுக்குச் சென்றனர். இந்த 3 படகுகளும் நேற்றுமுன்தினம் மாலையில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே, இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தன.

அப்போது, அங்கு அதிநவீன படகுகளில் வந்த இலங்கை கடற் படையினர் 3 படகுகளில் இருந் தவர்களையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இலங்கை பருத்தித் துறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், நேற்று மாலை பருத்தித் துறை நீதிமன்ற நீதிபதி விஜயராணி வீட்டுக்கு 26 மீனவர்களையும் அழைத்துச் சென்று, நீதிபதி முன்னிலையில் அவர்களை ஆஜர்படுத்தியுள்ளனர்.

நீதிமன்றக் காவல்

மீனவர்கள் அனைவரையும் வரும் ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி விஜயராணி உத்தரவிட்டார். மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோடியக்கரைக்கு தென் கிழக்கே, இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு படகு பழுதானதாம். காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த படகை மீட்பதற்காக, மற்ற இரு படகுகளும் அதன் பின்னாலேயே சென்றுள்ளன. அப்போது, எல்லை தெரியாமல் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும், இந்த விளக்கத்தை இலங்கை கடற்படை யினர் ஏற்காமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கைது செய்து விட்டார்கள் என்றும் மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு கடிதம் எழுதியுள்ளார்.

பாக் ஜலசந்தி பகுதியில் வழக்கமான மீன்பிடி எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும்போது இதுபோல இலங்கை கடற் படையினர் மீனவர்களைப் பிடித்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இப்பிரச்சினையில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு, இலங்கை அரசுடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி, மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SCROLL FOR NEXT