உலக பாரம்பரிய தினம் வரும் 19-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்-லைன் நிறுவனமான கிராப்ட்ஸ்வில்லா டாட் காம், இந்த விழா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகை வித்யா பாலனை விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.
இது தொடர்பாக கிராப்ட்ஸ் வில்லா டாட் காம் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பல்வேறு மதங்களைச் சார்ந்த அனைவரும் ஒரே நாளில் தங்கள் கலாச்சார மரபுகளைக் கொண்டாட உலக பாரம்பரிய தினம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. உலக பாரம்பரிய தினத்தை அனைவரும் தங்களின் மரபார்ந்த வழியில் உடைகளை உடுத்தி, ஆடிப்பாடி, உணவு உண்டு கொண்டாட வேண்டும். நமது பாரம்பரிய உடைகளான கிமோனோ, பாஜு குரிங், சல்வார் சூட்ஸ், குர்தீஸ் ஆகியவற்றை அணிய வேண்டும். கைவினைப் பொருட்கள், இனிப்புகள், புத்தகங்கள் ஆகியவற்றை அன்பளிப்பாக அளிக்கலாம். பள்ளிப் பருவ விளையாட்டுகளை விளையாட லாம்” என்று தெரிவித்துள்ளது.
விளம்பரத் தூதர் வித்யா பாலன் கூறும்போது, “உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடுவதால் நமக்கு நமது முன்னோர்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் அழிந்து வரும் கைவினைக் கலைகளைப் போற்றி, வாழ்வாதாரத்துக்காக போராடும் கலைஞர்களின் வாழ்வில் விளக்கேற்றிய திருப்தி ஏற்படும்” என்றார்.