தமிழகம்

ஜெ.வழக்கில் மேல்முறையீடு: கர்நாடக அரசின் முடிவுக்கு ராமதாஸ் வரவேற்பு

செய்திப்பிரிவு

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது சற்று தாமதிக்கப்பட்ட முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது சற்று தாமதிக்கப்பட்ட முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு என்பதை தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.

இந்தத் தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை விளக்கி, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்படி கர்நாடக முதலமைச்சருக்கும், சட்டத்துறை உயரதிகாரிகளுக்கும் நான் கடிதம் எழுதினேன்.

தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காகத் தடை விதிக்கப்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராவது தடுக்கப்பட்டிருக்கலாம்.

எனினும், இப்போதாவது இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்திருப்பதன் மூலம் நீதி புதைக்கப்படுவது தடுக்கப் பட்டிருக்கிறது; நீதி கேலிக்கூத்தாக்கப்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது; இந்த வழக்கை நடத்துவதில் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றம் கொண்டிருந்த நம்பிக்கையும் முழுமையாக காப்பாற்றப்பட்டிருக்கிறது.

தவறாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் பயனாக ஒருவர் மீண்டும் முதலமைச்சராகி, ஊழல்களையும், முறைகேடுகளையும் அரங்கேற்றுவதை அனுமதிப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். இதைத் தடுக்கும் வகையில், கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்ற தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகளும், தவறுகளும் இருப்பது அப்பட்டமாக தெரிவதால் அதைக் காட்டி, நீதிபதி குமாரசாமி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தைக் கோர வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக அரசின் சார்பில் வாதிட வழக்கறிஞர் ஆச்சார்யாவை நியமிக்கலாம் என கர்நாடக அரசு தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

இவ்வழக்கின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்தவர் ஆச்சார்யா தான் என்பதால், அவரையே இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT