தமிழகம்

மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம்: காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர்

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் பேரூராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும் என்ற கடந்த 2008-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. எனினும், பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், கடந்த 2011-ம் ஆண்டு மீண்டும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு ரூ.8.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பூஞ்சேரியில், 3 ஏக்கர் பரப்பளவில் கழிவுநீர் நிலையம், 2 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் சண்முகம், செங்கல்பட்டு கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், பேரூராட்சி உதவி இயக்குநர் செல்வம் மற்றும் பேரூராட்சி தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் சுத்திகரிப்பு நிலை யத்தை பார்வையிட்டு அங்குள்ள வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.

இதுகுறித்து, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் கூறியதாவது: பூஞ்சேரி யில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாள்தோறும் 2.27 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றலாம். பாதாள சாக்கடையில் இணைப்பு பெற, ஒரு குடியிருப்புக்கு வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்தி இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மாதம் ரூ. 75 செலுத்த வேண்டும்.

பெரிய வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெற ரூ.5 லட்சம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். எனினும், பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களுக்கு இந்த வைப்பு தொகை மாறுபடலாம் என்று மேலும் அவர் கூறினார்.

SCROLL FOR NEXT