ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இறுதி நாளான நேற்று டிராஃபிக் ராமசாமி, பால் கனகராஜ் உட்பட 15 பேர் மனுத் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது.
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கி நேற்று மாலை 3 மணியுடன் முடிந்தது.
நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி, அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, மாற்று வேட்பாளர் மதுசூதனன், கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன், மாற்று வேட்பாளர் மூர்த்தி, சுயேச்சைகளாக டிராஃபிக் ராமசாமி, பால் கனகராஜ் உள்ளிட்ட 37 வேட்பாளர்கள் 39 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் 15 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. சுயேச்சை வேட்பாளர்களாக எம்.சந்திரமோகன், ஏ.வேணுகோபால், கே.சண்முகம், ஏ.நூர்முகமது, எம்.எஸ்.காஜா நிஜாமுதீன், வி.ரமேஷ், யு.நாகூர் மீரான் பீர்முகமது, எஸ்.சேட்டு, ஆர்.ஜெயக்குமார், எம்.மன்மதன், எஸ்.மீனாட்சி சுந்தரம், ஆர்.செந்தில்குமார் ஆகிய 12 பேர் மனுத் தாக்கல் செய்தனர். மக்கள் மாநாட்டுக் கட்சி சார்பில் டி.பால்ராஜ் என்பவரும் மனுத் தாக்கல் செய்தார். ஏற்கெனவே மனுத் தாக்கல் செய்துள்ள டிராஃபிக் ராமசாமி மற்றும் தமிழ் மாநில கட்சி சார்பில் பால் கனகராஜ் ஆகியோரும் நேற்று மீண்டும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இறுதி நாளான நேற்று மாலை வரை 50 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அகமது ஷாஜகான், ஆப்ரஹாம் ராஜ் மோகன், டிராஃபிக் ராமசாமி, பால் கனகராஜ் ஆகிய நால்வரும் கூடுதலாக ஒவ்வொரு மனுக்களை தாக்கல் செய்துள்ளதால் பெறப் பட்ட மனுக்களின் எண்ணிக்கை 54 ஆக உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 39 சுயேச்சைகள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று நடக்கிறது. இன்று மாலை ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட மனுக்கள் விவரம் தெரிந்துவிடும். வரும் 13-ம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாளாகும். அன்று மாலை இறுதியாக களத்தில் உள்ளவர்கள் யார் என்பது உறுதியாகிவிடும்.
திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிலிருந்து ஒதுங்கி யுள்ள நிலையில் ஆர்.கே.நகரில் அதிமுக இந்திய கம்யூனிஸ்ட் இடையே நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. ஜெயலலி தாவுக்கு ஆதரவாக 28 அமைச் சர்கள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலா ளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட் பாளர் சி.மகேந்திரன் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்க அமைப்புகளும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளன. இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு
இடைத்தேர்தலையொட்டி வேட்பாளர்கள் செலவின பார்வையாளராக கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் பணியாற்றும் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அதிகாரி மன்ஜீத் சிங்கும், பொதுப் பார்வையாளராக கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரியான ராஜூ நாராயண்சாமியும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறுவதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தேர்தல் பார்வையாளர்கள் தங்கியிருக்கும் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையிலும் தனியாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்:
மாவட்ட தேர்தல் அதிகாரி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் - 044 28525340, பேக்ஸ் எண்- 044 28515341
பொதுப் பார்வையாளர் தொலைபேசி எண் - 044 28515342, கைபேசி எண் - 94450 71056
செலவின பார்வையாளர் தொலைபேசி எண் - 044 28515343, கைபேசி எண் - 94450 71057
இத்தகவல்களை தமிழக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.