தமிழகம்

இறைச்சிக் கூடங்களில் கழிவுநீர் வெளியேற்றம் இல்லை: சென்னை மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சி இறைச்சிக் கூடங்களிலிருந்து கழிவுநீர் வெளியேற்றம் இல்லை என்று மாநகராட்சி கூறியுள்ளது.

சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூரில் உள்ள இறைச்சிக் கூடங்களிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமலேயே வெளியேற்றப்படுவதாகக் கூறி இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் 2013-ம் ஆண்டு ‘இந்தியாவின் கால்நடைகளுக்காக’ என்ற அமைப்பால் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து இறைச்சிக் கூடங்கள் பற்றிய விரிவான அறிக்கையை மாநகராட்சி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இறைச்சிக் கூடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இறைச்சிக் கூடங்களை மேம்படுத்தி, கழிவுகளை முறையாக சுத்தப்படுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறவுள்ளதால் கழிவுகளை முழுவதுமாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்கிறது. இதில் தற்போது சைதாப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம் இறைச்சிக் கூடங்களிலிருந்து கழிவுகள் வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “சைதாப்பேட்டையில் 100 சதவீதம் கழிவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. வில்லிவாக்கத்தில் கழிவுகளை கட்டுப்படுத்தும் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன” என்றார்.

வில்லிவாக்கத்தில் ரூ.26 லட்சம் செலவில் கட்டப்பட்ட இறைச்சிக் கூடத்திலிருந்து 2 கிலோ லிட்டர் கழிவுகள் தினமும் உற்பத்தியாகின்றன. சைதாப்பேட்டையில் ரூ.34 லட்சம் செலவில் கட்டப்பட்ட இறைச்சிக் கூடத்திலிருந்து தினமும் 7 கிலோ லிட்டர் கழிவுகள் உற்பத்தியாகின்றன. “இறைச்சிக் கூடத்தில் உள்ள கழிவுநீரை வெளியேற்றாமல் அங்குள்ள சுத்திகரிப்பு ஆலையில் கழிவுகளை சுத்தப்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் நீரை தரை கழுவவும், பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்துகிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.

கழிவுகளை சுத்தப்படுத்தி அதிலிருந்து கிடைக்கும் நீரை தரை கழுவவும், பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றவும் பயன்படுத்துகிறோம்

SCROLL FOR NEXT