ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ‘சைனிக் சமாஜ்’ கட்சி சார்பில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே முன்னாள் ராணுவத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய ராணுவத்தில் 1973-ம் ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதுவே 2006-ம் ஆண்டுகளில் பணியாற்றியவர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் ஓய்வூதி யமாக வழங்கப்படுகிறது. இந்த பாகுபாட்டை சரி செய்ய வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கையை அரசிடம் எடுத்துச்செல்ல கர்னல் பல்வீர்சிங் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு ‘சைனிக் சமாஜ்’ என்ற கட்சியை தொடங்கினார். இதன் மூலம் முன்னாள் ராணுவ வீரர் களின் கோரிக்கை மத்திய அரசி டம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தலின்போது ஹரியாணா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் பிரதமராக தேர்ந் தெடுக்கப்பட்ட 3-வது மாதத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என வாக்கு றுதி அளித்தார். மோடி ஆட்சி பொறுப்பேற்று ஒர் ஆண்டு கடந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
எனவே, முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சைனிக் சமாஜ் கட்சி முடிவு செய்தது. அதன்படி முன்னாள் ராணுவ வீரர்களை அதிகம் கொண்ட வேலூர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம், ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சைனிக் சமாஜ் மாநில தலைவர் கர்னல் சுந்தர் தலைமை வகித் தார். இதில், அணைக்கட்டு சட்டப் பேரவை உறுப்பினர் கலையரசு, முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.