புறநகர் மின்சார ரயில்களில் ஜிபிஎஸ் டிஸ்பிளே பலகைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ரயில் நிலையங்கள் பற்றிய தகவலை அதிக சத்தத்துடன் ஒலிக்கச் செய்யவேண்டும் என்று ‘தி இந்து உங்கள் குரல்’ சேவையில் ஒரு வாசகர் கூறியுள்ளார்.
‘தி இந்து’வின் ‘உங்கள் குரல்’ இலவச தொலைபேசி சேவையை தொடர்பு கொண்டு திருவள்ளூர் வாசகர் பாஸ்கர் கூறியதாவது:
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு அதிக அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். வரப் போகும் ரயில் நிலையங்களின் பெயர், ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்பம் மூலம் ரயில்களில் அறிவிக் கப்படுகிறது. தாம்பரம், செங்கல் பட்டு, திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி ஆகிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் இந்த வசதி உள்ளது. புதிதாக பயணம் செய்பவர்கள், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமின்றி, நெரிசல் அதிகம் இருக்கும் சூழ்நிலையில் அனைவருக்குமே இது மிகவும் வசதியாக உள்ளது.
ஆனால், சில ரயில்களில் இந்த அறிவிப்பு குரல் குறைந்த சத்தத்தில் ஒலிக்கிறது. பயணிகளுக்கு- குறிப்பாக முதியவர்களுக்கு சரியாக கேட்பதில்லை. மின்சார விரைவு ரயில்களில், நிற்காத ரயில் நிலையங்களையும் சேர்த்து அறிவிப்பதால், பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.
மேலும், ரயில் நிலையங்களின் பெயர்களைக் காட்டும் எலெக்ட் ரானிக் டிஸ்பிளே பலகை, ஒவ்வொரு பெட்டியிலும் 2 இடத் தில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் இவற்றை பார்ப்பது சிரமமாக இருக்கிறது. எனவே, மும்பையில் இருப்பது போல, ஒவ்வொரு பெட்டியிலும் 12 இடங்களில் டிஸ்பிளே பலகை வைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘‘இக்கோரிக்கைகள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்படும். அவற்றை பரிசீலித்து வாரியம்தான் அறிவிக்கும்’’ என்றனர்.