கடந்த ஓராண்டில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நரேந்திர மோடி அரசு, மக்களின் நம்பிக்கையை நாளுக்கு நாள் இழந்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை மயக்கும் வகையில் மலிவான வாக்குறுதிகளை அளித்து மத்தியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த ஓராண்டில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நரேந்திர மோடி அரசு, மக்களின் நம்பிக்கையை நாளுக்கு நாள் இழந்து வருகிறது.
ராகுல் காந்தி மத்திய பாஜக அரசின் தவறுகளை நாள்தோறும் பிரச்சாரத்தின் மூலம் அம்பலப்படுத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.'நாங்கள் ஆட்சிக்கு வந்த 100 நாளில் வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்போம் ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவோம்” என பாஜக தலைவர்கள் சொன்னார்களே, இதுநாள் வரை ஒரு ரூபாயாவது மீட்டார்களா?
மக்களின் வங்கி கணக்கில் ஒரு ரூபாயாவது செலுத்தினார்களா? ஏன் மீட்கவில்லை என்று கேட்டால், இதுதேர்தலுக்காக சொன்ன ஜால வித்தை என்று கூறுவதா? இதைவிட அரசியல் மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா? கடந்த ஓராண்டில் 19 வெளிநாடுகளில் 56 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்திய அரசின் வரிப் பணம் ரூ.317 கோடி செலழிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் பிரதமர் என்று அழைக்கும் அளவிற்கு வெளிநாட்டில் வலம் வந்தவர் ஒவ்வொரு நாளும் நான்கு விதமான வண்ண ஆடம்பர உடைகளை அணிந்து பவனி வந்தவர்; வெளிநாட்டில் தயாரித்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த உடையணிந்த இப்பிரதமரைப் போல வேறு பிரதமரை இதுவரை இந்தியா கண்டதுண்டா?
மத்திய அரசின் மானிய சுமையை குறைக்க எளிமையாகவும், சிக்கனமாகவும் இருக்க வேண்டுமென அப்பாவி மக்களுக்கு அறிவுரை கூற நரேந்திர மோடிக்கு என்ன தகுதியிருக்கிறது? ஊருக்குத்தான் உபதேசமா? மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்தை 2013இல் ஆதரித்து நிறைவேற்ற துணையாக இருந்த பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்ததும் அவசர சட்டத் திருத்தம் கொண்டு வந்தது ஏன்?
விவசாயிகளின் நில உரிமையைப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகலாமா? ஊழல் வழக்கிலிருந்து விடுவித்துக்கொள்ள விவசாயிகள் விரோதச் சட்டத்தை அதிமுக ஆதரிக்கலாமா? குஜராத் மாநிலத்தில் முந்தரா பகுதியில் 18 ஆயிரத்து 375 ஏக்கர் விவசாய நிலத்தை 30 வருட குத்தகைக்கு ஒரு சதுர மீட்டர் 11 ரூபாய்க்கு அதானிக்கு அள்ளி கொடுத்ததை சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளது. இது போன்ற ஒதுக்கீடுகளை செய்வதற்காகத்தான் நிலப்பறிப்பு சட்டமா?
விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலையில் பறித்து அம்பானி, அதானி போன்றவர்களுக்கு அளிப்பதே பாஜகவின் நோக்கமா? குஜராத்தில் மோடி ஆண்ட 2002 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மட்டும் ரூ. 3,000 கோடியிலிருந்து ரூ 40,000 கோடியாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதை பாஜகவினரால் மறுக்க முடியுமா?
மத்திய பாஜக அரசு 2003-2004இல் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் ரூ.83 ஆயிரம் கோடி. மத்திய காங்கிரஸ் அரசு 2013-14இல் விவசாயிகளுக்கு வழங்கிய கடன் ரூ.8 லட்சம் கோடி. இந்த கடன் 9 சதவிகித வட்டியில் வழங்கப்பட்டது. இதில் 2 சதவிகித வட்டியை மத்திய காங்கிரஸ் அரசு மானியமாக வழங்கி, வட்டியை 7 சதவிகிதமாக குறைத்தது. ஆனால், இன்று பாஜக ஆட்சியில் 11 சதவிகிதமாக வட்டி உயர்த்தப்பட்டிருக்கிறது.
இப்படி வட்டியை உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கலாமா?நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் விலைபொருள்களுக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையின்படி இடுபொருள் செலவில் 50 சதவிகிதத்தை கூட்டி குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று நரேந்திரமோடி வாக்குறுதி அளித்தாரே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினாரா?
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு குவிண்டால் கோதுமை விலையை ரூ.1,400லிருந்து ரூ.1,450 ஆகவும், நெல் விலையை ரூ.1,310லிருந்து ரூ.1,360ஆகவும், கரும்பு விலையை ரூ.220லிருந்து ரூ.270ஆகவும், மிக குறைந்த அளவில் பெயருக்குத் தான் உயர்த்தப்பட்டதே தவிர, கொடுத்தவாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?
நாடு முழுவதும் உற்பத்தியான சர்க்கரை தேங்கியிருப்பதால் விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய நிலுவைத்தொகை ரூ.21 ஆயிரம் கோடி. தமிழ்நாட்டில் மட்டும் நிலுவைத்தொகை ரூ.825 கோடி. தமிழ்நாட்டில் வேறு மாநிலங்களில் இல்லாத 5 சதவிகித மதிப்புக்கூட்டு வரி சர்க்கரை மீது விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரையின் விலை ஒரு டன்னுக்கு ரூ. 1,200 கூடிவிட்டது. இதன்மூலம், சர்க்கரையின் விலை ஒரு கிலோ தமிழ்நாட்டில் ரூ.28, கர்நாடகாவில் ரூ.21 என குறைத்து விற்கப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் சர்க்கரையை விற்க முடியவில்லை. இதன் மூலம் கரும்பு விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து செயல்படலாமா?
சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014இல் 115 டாலர். அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.41. தற்போது கச்சா எண்ணெய் விலை 60 டாலராக குறைந்த நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.69.45. சர்வதேச சந்தையில் 40 சதவிகிதம் விலை குறைந்தாலும் 7 சதவிகிதம் தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நியாயமாகப் பார்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.46 விலைக்கே விற்கப்பட வேண்டும். ஆனால், விலைக்குறைப்பின் பயனை சுங்கவரி, கலால் வரிகளை நான்கு முறை உயர்த்தி ரூ.90 ஆயிரம் கோடி வருமானத்தை வஞ்சகமாக மத்திய அரசு பெருக்கிக்கொண்டது.மக்களின் மீது சுமையை ஏற்றமாட்டோம் என்று சொன்னவர்கள் சுமையை கூட்டினார்களே தவிரகுறைத்தார்களா?
முத்தான திட்டம் என்று 'ஜன்தன் யோஜனா' வை நரேந்திரமோடி அரசு தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. 15 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 24 கோடி வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டதை பாஜகவினர் மூடி மறைப்பது ஏன்?
பாஜக ஆட்சியில் துவக்கப்பட்டதில் 8 கோடி வங்கி கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செயலற்று இருக்கிறது. ஒவ்வொரு வங்கிக் கணக்கையும் நிர்வகிக்க ரூ.250 செலவாகிறது.
இதற்காக, இந்திய வங்கிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.2,100 கோடி தேவைப்படுகிறது. 15 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை புதுப்பித்துக் கொள்ளத்தான் இந்த வங்கி கணக்குகள் பயன்பட்டதே தவிர, இதனால் எவருக்கும் எந்தப் பயனும் இதுவரை ஏற்படவில்லை. இதைவிட, மக்களை ஏமாற்றும் நாடகம் வேறு என்ன இருக்க முடியும்?
நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய தொகையை நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க பாஜக அரசு நிதிவெட்டை அமல்படுத்தியிருக்கிறது. சமூகத்துறையில் மட்டும் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 122 கோடி நிதிவெட்டு. கல்வித்துறையில் ஒதுக்கப்பட்ட ரூ.82 ஆயிரத்து 771 கோடி தற்போது ரூ.69 ஆயிரத்து 74 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்துத் துறைகளிலும் நிதிவெட்டை அமல்படுத்தி ரூ.3 லட்சம் கோடியை நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க தந்திரமாக பாஜக அரசு பயன்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை அபகரித்த ஒரே அரசு பாஜகவாகத் தான் இருக்கமுடியும்.
நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உருவாக மத்திய காங்கிரஸ் அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால், பாஜக அரசோ காலியாக இருந்த தலைமை தகவல் ஆணையர் பதவியை 10 மாதங்கள் கழித்து தற்போது தான் நிரப்பியிருக்கிறது. இன்னும் 3 தகவல் ஆணையர் பதவிகள் நிரப்பப்படவில்லை.
தலைமை தகவல் ஆணையரிடம் மட்டும் 39,000 மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த 10 மாதங்களாக நிலுவையில் உள்ளன. இதை தீர்க்கவே பல மாதங்களாகும். பாஜக வைத் தவிர வேறு எந்த அரசும் திறந்த வெளிப்படையான நிர்வாகத்தை இப்படி குழி தோண்டி புதைக்காது. இவர்கள்தான் ஊழல் ஒழிப்பு வேடம் அணிந்து அவதுhறு சேற்றை அள்ளி வீசுகிறார்கள்.
ஊழலை ஒழிப்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டத்தை டிசம்பர் 2013இல் நிறைவேற்றியது. ஊழலை தடுக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கு கடந்த பல மாதங்களாக தலைமைப் பொறுப்பு நிரப்பப்படாமல் தற்போதுதான் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஊழலை ஒழிப்பதாக வாய்கிழிய பேசிய பாஜக வினர் லோக்பால், சி.வி.சி. அமைப்புகளை செயலுக்கு கொண்டுவராமல் முடக்கி வைப்பது ஏன்?
மத்திய காங்கிரஸ் அரசு மே 2014இல் கொண்டுவந்த பட்டியலின மக்கள் வன்கொடுமை தடுப்பு அவசர சட்டத்தை பாஜக அரசு ஏன் நிறைவேற்றவில்லை? இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்குகள் வேகமாக முடித்து தண்டனை வழங்க முடியும். இச்சட்டத்தை நிறைவேற்றாமல் காலாவதி நிலைக்கு தள்ளிவிட்டு, அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் விழாவை கொண்டாட பாஜக விற்கு என்ன தகுதி இருக்கிறது?
பட்டியலின மக்களின் சிறப்பு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.13,208 கோடியை ரூ. 7,714 கோடியாக குறைத்த பாஜக வை விட தலித் விரோத அரசு வேறு இருக்க முடியுமா? நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கொடுத்த வாக்குறுதிகளை கடந்த ஓராண்டில் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி நாடகமாடி வருகிறது.
பாஜகவின் சாயம் ஓராண்டில் வெளுத்துவிட்டது. மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களிடம் வாக்குகளைப் பெற்று வேகமாக ஆட்சிக்கு வந்தார்கள். மேலே வந்த அதே வேகத்தில் தற்போது ஓராண்டிலேயே கீழ்நோக்கி சரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சோனியா காந்தி தலைமையில், ராகுல் காந்தி வழிகாட்டுதலின் படி தேர்தல் பிரச்சாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சொன்னதைச் செய்யாத மத்திய பாஜக அரசின் ஓராண்டு அவலங்களை மக்கள் மன்றத்தில் தீவிர நடைபயண பிரச்சாரத்தின் மூலம் தோலுரித்துக் காட்டுவோம்.
தமிழகத்தில் மதவாத ஊழல் சக்திகளை தேர்தல் களத்தில் முறியடிக்க அணி திரள்வோம்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.