தமிழகம்

மாணவர் அமைப்பிடம் ஐஐடி நிர்வாகம் சரணடைந்துவிட்டதாக எச்.ராஜா குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

மாணவர் அமைப்பிடம் சென்னை ஐஐடி நிர்வாகம் சரணடைந்துவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐஐடி மாணவர் அமைப்பு மீதான தடை விவகாரத்தை தீர்ப்பதற்கு ஐஐடி நிர்வாகம் மேற்கொண்ட அணுகுமுறை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஐஐடி வளாகத்தில் சாதி மற்றும் வகுப்புவாத கலவரத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்ட, கட்டுப்பாடு இல்லாத சக்திகளிடம் ஐஐடி நிர்வாகம் சரண் அடைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த பிரச்சினையை தொடக்கம் முதலே ஐஐடி நிர்வாகம் தவறாகவே கையாண்டது.

மாணவர் அமைப்பின் அங்கீகார விதிமுறை மீறல், இந்து மதத்தின் மீது தாக்குதல் என இந்த பிரச்சினை இரு விஷயங்களை உள்ளடக்கியதாகும். அந்த வகையில், மாணவர் அமைப்பு அங்கீகார விதிமீறல் தங்கள் கல்விநிறுவனம் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்பது நாட்டில் உள்ள 100 கோடி இந்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். மாணவர் தடை விவகார பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றபோது, இந்த விஷயத்தை நீங்கள் ஏன் பரிசீலிக்கவில்லை?

இந்து மதத்தை விமர்சித்து அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் அச்சிட்டு வெளியிட்ட கருத்தில் தவறு ஒன்றும் இல்லை என்று ஐஐடி நிர்வாகம் கருதுகிறதா? மற்ற மதங்களை தாக்கி ஒருதரப்பு மாணவர்கள் கருத்துகளை வெளியிடும்போது ஐஐடி நிர்வாகம் கண்டும் காணாதது போல் இருக்குமா? ஐஐடி வளாகத்தில் இந்து மதம் தாக்கப்படுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்? சமீப காலமாக சமூக விரோத, தேசவிரோத செயல்பாடுகள் உங்களின் தலைமையிலான நிர்வாகத்தில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கருத்துச் சுதந்திரம் என்று சொல்லப்படும்போது அதுதொடர்பான விவாதமோ, கருத்துப்பகிர்வோ ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. மாணவர் அமைப்பினர் இந்து மதம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் ஒருதலைப்பட்சமாக கருத்து தெரிவித்துள்ளனர். சமஸ்கிருத மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும், தலித்துகள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்தை தழுவ அனுமதிக்க மாட்டேன், ராணுவத்தில் முஸ்லீம்களை சேர்த்தால் அது இந்தியாவுக்கு ஆபத்து என்ற அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது நடுநிலைமையான கருத்துப்பகிர்வாக, விவாத களமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT