செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், ரயில்கள் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் அடங்கிய நேர அட்டவணைகள் இல்லாததால், பயணிகள் பெரிதும் அவதிப்படுவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 28 விரைவு ரயில்கள், செங்கல்பட்டை கடந்து செல்கின்றன. இதேபோல், தென் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்கள் செங்கல்பட்டு ரயில் நிலை யத்தை கடந்துதான் சென்னை வருகின்றன. செங்கல்பட்டிலிருந்து தினந்தோறும் 42 மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகின்றன. தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், விரைவு மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் நேர அட்டவணை, ரயில் நிலையத்தின் உள்ளே அமைக்கப்படாததால் வெளியூர் பயணிகள், ரயில்களின் நேர விவரம் தெரியாமல் அவதிப் படுகின்றனர்.
பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் அமைக்கப் பட்டுள்ள கான்கிரீட் பாதை குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதில் நடக்க முடியாமல் பயணிகள் சிரமப்படுகின்றனர். ரயில் நிலையத்தின் உள்ளே போதிய கட்டண கழிப்பறைகள் அமைக் கப்படாததால், அவசர நேரத்தில் 4 நடைமேடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பெண்கள் பெரிதும் அவதியடைவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ‘தி இந்து’வின் உங்கள் குரலில் சுந்தர்ராஜன் என்ற பயணி கூறியதாவது: சென்னை, தாம்பரத்தை அடுத்து முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் செங்கல்பட்டு ரயில் நிலையம் அடிப்படை வசதி களின்றி உள்ளது. ரயில் நேர அட்டவணைக்கு பதில் ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் தனியார் விளம்பர பலகைகளே அதிகம் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பர பலகைகளை அகற்றி ரயில் நேரம் குறித்த அட்டவணையை அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில் நிலைய மேலாளர் முருகேசன் கூறியதாவது: விளம்பர பலகைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் விரைவு மற்றும் மின்சார ரயில் களின் நேர விவரம் அடங்கிய அட்டவணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.