ஜம்மு காஷ்மீரில் காராகோரம் என்ற இடத்திலிருந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தூரம் இந்திய எல்லையைக் காக்கும் பணியில் இந்தோ திபெத் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பயிற்சிப் பிரிவு ஐ.ஜி. ஹர்பஜன்சிங் பெருமிதம் தெரிவித்தார்.
சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் இந்தோ திபெத் எல்லைக் காவல்படை பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த 344 வீரர்களின் அணிவகுப்பு நேற்று நடைபெற்றது.
இந்தோ திபெத் பயிற்சி பிரிவு ஐ.ஜி. ஹர்பஜன் சிங் தலைமை வகித்து, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் பேசியதாவது:
1962-ம் ஆண்டில் சீன போருக்குப்பின், இந்திய சீன எல்லை பாதுகாப்புக்காக இந்தோ திபெத் எல்லைக் காவல் படை தொடங்கப்பட்டது. முதலில், 4 பட்டாலியனுடன் தொடங்கப் பட்ட படை, தற்போது 60 பட்டாலியன்களுடன் 90 ஆயிரம் வீரர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் காராகோரம் என்ற இடத்திலிருந்து அருணாச் சலப் பிரதேசத்தில் ஜாசப்லா வரைக்கும் 3,488 கி.மீ. தூரம் இந்திய எல்லையைக் காக்கும் பணியில் இவ்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடல்மட்ட உயரம் 9,000 அடியிலிருந்து 18,700 அடி வரையிலும் மைனஸ் 40 டிகிரி கடுங்குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட் படுத்தாமல் இந்தோ திபெத் வீரர்கள் நாட்டுக்காக உழைக்கின்றனர். எல்லைப் பாதுகாப்பு தவிர, நக்சலைட்டுகளுக்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் மாளிகை, குடியரசு துணைத் தலைவர் மாளிகை, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகத்தை காக்கும் பணியிலும் இவ்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பயிற்சி முடித்த இளம் வீரர்கள் தாய் நாட்டுக்காக விசுவாசத் துடனும், வீரத்துடனும் பணிபுரிந்து இந்தோ திபெத் எல்லைக் காவல் படையின் பெயரை உலகறியச் செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பயிற்சிகளில் முதலிடம் பெற்ற விகாஸ் டாக்கூர் (அனைத்து பிரிவு), சாங்குமச்சி சாங்கு (உடற்பயிற்சி), கசுங்கு போர்டு டச்சாங்கு (துப்பாக்கி கையாளுதல்), எஸ்.டி.பாண்டு (சிறந்த அணிவகுப்பு), சந்தீப்சிங் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஐ.ஜி. ஹர்பஜன் சிங்குக்கு டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன், நினைவுப் பரிசை வழங்கினார். கமாண்டன்ட் பன்வாரிலால் நன்றி கூறினார்.