தமிழகம்

‘நெஞ்சத்தால் இணைந்து விட்டோம்.. இனி பிரிவில்லை’: கருணாநிதி பேரன் திருமண விழாவில் வைகோ உருக்கம்

செய்திப்பிரிவு

‘நெஞ்சத்தால் இணைந்து விட்டோம். இனி பிரிவில்லை’ என திமுக தலைவர் கருணாநிதி பேரன் திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

சென்னையில் நேற்று நடை பெற்ற கருணாநிதியின் பேரன் அருள்நிதி கீர்த்தனா திருமண விழாவில் பங்கேற்ற அவர், மண மக்களை வாழ்த்தி பேசியதாவது:

இந்த நேரத்தில் மனதை நெகிழ வைக்கும் பல நினைவுகள் என் இதயத்தில் வந்து மோதுகின்றன. 44 ஆண்டுகளுக்கு முன்பு எனது திருமணத்துக்கு வரமுடியாத கருணாநிதி, கலிங்கப்பட்டி இல்லத் துக்கு வந்து வாழ்த்தியதும், 1978-ம் ஆண்டு எனது தம்பியின் திருமணத்தை நடத்தி வைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது. கலை உலகில் பல சாதனை படைத் தவர் கருணாநிதி. அவரது வழியில் அருள்நிதியும் திரைத்துறையில் நடிகராக மிளிர்ந்து வருகிறார்.

எத்தனையோ பேர் செய்த தியாகத்தால் கட்டப்பட்ட மாளிகை திராவிட இயக்கம். அதனை எந்த காலத்திலும், யாராலும், எந்தப் புயலாலும் வீழ்த்த முடியாது. எப்படிப்பட்ட பிரளயம் வந்தாலும் சாய்க்க முடியாது. சாய்க்கவும் விடமாட்டோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு

கடந்த 2004 மக்களவைத் தேர் தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்டது. அதன்பிறகு 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் வைகோ இணைந்தார். 9 ஆண்டு களுக்குப் பிறகு, நேற்று நடை பெற்ற அருள்நிதி திருமண விழாவில் கருணாநிதியும், வைகோ வும் ஒரே மேடையில் பேசியது குறிப்பிடத்தக்கது. கருணாநிதிக்கும் தனக்கும் இடையிலான உறவை உருக்கமாக நினைவுகூர்ந்த வைகோ, மணமக்களை வாழ்த்து வதுபோல ‘நெஞ்சத்தால் இணைந்து விட்டோம். இனி பிரிவில்லை’ என்றார். திருமண விழாவுக்கு வந்திருந்தவர்கள் அவரது பேச்சை கைதட்டி வரவேற்றனர்.

கடந்த அக்டோபர் 29-ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த பாமக நிறுவனர் ராமதாஸின் பேத்தி திருமண வரவேற்பு விழாவில் வைகோவும் மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசியது பரபரப்பாக பேசப்பட்டது.

அருள்நிதியின் திருமண விழா திமுக - மதிமுக கூட்டணிக்கு வழி ஏற்படுத்தியிருப் பதாக இரு கட்சிகளின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT