தமிழகம்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசாவில் கரையை கடந்தது: தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் உருவாகியிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை ஒடிசாவில் நேற்று கரையை கடந்தது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக் கடலில் ஆந்திராவின் வடக்கு எல்லைக்கும் ஒடிசாவின் தெற்கு எல்லைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது. அது தீவிரமடைந்து ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்தது. ஒடிசா மாநிலம் பூரி மற்றும் கோபால்பூர் இடையே நேற்று காலை அது கரையை கடந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் ஏற்றப்பட்டிருந்த ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டது. தமிழகத்துக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகையில் 13 செ.மீ, நடுவட்டத்தில் 10 செ.மீ, கேத்தியில் 6 செ.மீ, கூடலூர் பஜார், தேவலாவில் 3 செ.மீ, குன்னூரில் 2 செ.மீ மழை நேற்று பதிவாகியுள்ளது. மேலும் கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மழை பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் ஆங்காங்கே கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.

SCROLL FOR NEXT