திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டை அருகே பள்ளப்பட்டியை சேர்ந்த விவசாயி மகேஷ்மூர்த்தி (52). இவர் டிராக்டர், ஜே.சி.பி. மூலம் பள்ளப்பட்டி கண்மாயில் மணல் அள்ளி கடத்தினாராம். கடந்த 3-ம் தேதி மணல் அள்ளிக்கொண்டிருந்தபோது, வி.ஏ.ஓ. பாலமுருகானந்தம், மகேஷ்மூர்த்தியின் டிராக்டர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தார். ஆர்.டிஓ. விசாரித்து, மகேஷ்மூர்த் திக்கு ரூ.26,100 அபராதம் விதித்தார். கடந்த 16-ம் தேதி அவர் அபராதத் தொகையை கட்டிவிட்டு, நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நின்ற டிராக்டர், ஜே.சி.பி.யை மீட்க அன்றைய தினம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றார்.
வட்டாட்சியர் மோகன் (49) அவரிடம் ரூ.10 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். மகேஷ்மூர்த்தி அவ்வளவு தொகை தம்மிடம் தற்போது இல்லை என பேரம் பேசியுள்ளார். அதற்கு மோகன், “நான் கையெழுத்து போட்டால் தான் வண்டி கிடைக்கும். அதற்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவேன்” என டிராக்டர், ஜே.சி.பி.யை கொடுக்க மறுத்துள்ளார். அதனால் மகேஷ்மூர்த்தி அன்று மாலையே திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் கொடுத்து அனுப்பிய ரசாயன பவுடர் தடவிய ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வட்டாட்சியரின் அலுவலகத்துக்கு மகேஷ்மூர்த்தி சென்றுள்ளார். அங்கு அவர் இல்லை. அவரை தொடர்பு கொண்டபோது, “நான் சொல்லும் தரகரிடம் கொடுத்துவிடுங்கள். மறுநாள் வந்து வண்டியை எடுத்துச் செல்லலாம்” என்றார். அதற்கு மகேஷ்மூர்த்தி, “தங்களிடம்தான் தருவேன். வேறு யாரிடமும் கொடுக்கமாட்டேன்” என்றார். உடனே வட்டாட்சியர் காலை தனது அலுவலக குடியிருப்புக்கு வரும்படி கூறியுள்ளார். அவர் கூறியபடி நேற்று காலை அவரது அலுவலக குடியிருப்புக்கு மகேஷ்மூர்த்தி பணத்துடன் சென்றார். ஆனால் மோகன் பணத்தை வாங்க மறுத்து, தரகர் வருவார். அவரிடம் கொடுத்துவிடுங்கள் என மீண்டும் சமாளித்துள்ளார். தரகர் வர தாமதமானதால் வேறு வழியின்றி வட்டாட்சியர் மோகனே அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பெற்றுள்ளார்.
வீட்டைச் சுற்றி நின்ற டி.எஸ்.பி. ஜான் கிளமெண்ட், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரைக் கைது செய்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் ஏற்கெனவே 2 முறை லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் கைது சம்பவத்தில் இருந்து தப்பியவர்.