சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா 15 நிமிடங்கள் மட்டுமே பேசினாலும், உண்மையை பேச அவர் தயாராக இல்லை என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட ஜெயலலிதா 15 நிமிடங்கள் மட்டுமே பேசினாலும், உண்மையை பேச அவர் தயாராக இல்லை என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது.
'மக்களால் நான், மக்களுக்காகவே நான், எனக்கு எல்லாமே நீங்கள்தான்” என்று மக்களை மயக்குகிற வகையில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். தாம் போட்டியிடுகிற தொகுதி மண்ணில் தனது கால் படாமலேயே வாகனப் பிரச்சாரம் மேற்கொண்ட ஒரே வேட்பாளர் இவராகத்தான் இருக்க முடியும். இதைகூட கின்னஸ் சாதனையாக பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொஞ்சம் கூட தயங்காமல் கூறுகிற துணிச்சல் ஜெயலலிதாவுக்குதான் இருக்க முடியும். தமிழ்நாட்டில் இவரது ஆட்சிக்காலத்தில் 4,992 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாக செய்யப்பட்டதாக கூறுகிறார். ஏறத்தாழ 3,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 2007, 2008 ஆம் ஆண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்யப்பட்டு தற்போது மின்உற்பத்தியை வழங்கி வருகிறது.
மின் உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கழித்துதான் மின்சார உற்பத்தியை பெற முடியும். கடந்த ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டத்தின் பயனைத்தான் இவரது ஆட்சியின் சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அதிமுக ஆட்சிக்காலத்தில் முதலீடு செய்யப்பட்டு இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை என்பதை எந்த மன்றத்தின் முன்னாலும் நிரூபிக்க தயாராக இருக்கிறோம்.
தொழில் வளர்ச்சி ஏற்பட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் அபாண்டமாக கூறியிருக்கிறார். மத்திய அரசின் புள்ளியல் துறை மதிப்பீட்டின்படி இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 31, 2015 நிலவரப்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 85 லட்சம் பேர் என்பதை ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா ?
இவர்களில் 43 லட்சம் பேர் பெண்கள் என்பதை இல்லை என்று கூற முடியுமா ?பதிவு செய்துள்ள 4 லட்சம் பொறியியல் படித்த பட்டதாரிகளில் எவருக்கும் கடந்த 10 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதே தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறுவதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
ஆர்.கே. நகர் தொகுதியைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத் தலைவர் சந்தீப் சக்சேனா அதிமுகவின் செயலாளரைப் போலவே செயல்பட்டு வருகிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டன. ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தின் போது வடசென்னையே முடங்கிப் போகிற அளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டன. தீவிர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிக்க முடியவில்லை. அன்றாட வாழ்க்கை முழுமையாக பாதிப்புக்கு உள்ளானது.
தமிழகத்திலேயே மிகமிக பின்தங்கிய தொகுதியாக ஆர்.கே. நகர் விளங்கியதற்கான பொறுப்பை அதிமுகவினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கையூர் குப்பை மேடு பிரச்சனையோ, துப்புறவு தொழிலாளர் பிரச்சினையோ, கொடுங்கையூர் - தண்டையார்பேட்டை ரயில் மேம்பாலம் கட்டுவதில் தேவையற்ற காலதாமதம் போன்ற பல்வேறு பிரச்சினைகளை மூடி மறைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்காக அதிமுகவினர் லஞ்ச பணத்தின் மூலம் பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் பேனர்களோ, சுவரொட்டிகளோ, பொதுக்கூட்டங்களோ இல்லை என்று சொன்னாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் இலவசப் பொருட்கள் வழங்குவதற்கு எந்த தடையும், எங்கேயும் இல்லாத நிலை அங்கே உருவாகியிருக்கிறது. ஆர்.கே. நகரைப் பொறுத்தவரை விழாக்கோலம் பூண்டு 'பணமழை' பொழிந்து கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயகம் இதுவரை காணாத தேர்தல் மோசடிகள் ஆர்.கே.நகரில் அரங்கேற்றிய தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் மக்கள் தேர்தல் மீதே நம்பிக்கை இழந்து விடுவார்கள்.
நியாயமான, பாரபட்சமற்ற தேர்தலை நடத்த வேண்டிய தமிழக தேர்தல் ஆணைய தலைவர் சந்தீப் சக்சேனா மீது தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்க தவறினால் இவர் மீது வழக்கு தொடருவதற்கான முயற்சியில் இறங்க நேரிடும்'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.