லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக எம்எல்ஏ, மனைவி, மைத்துனர் காயமடைந்தனர்.
வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த அசோக் (44). ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடியில் உள்ள உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவி நித்யா (36), மகன் விமல், மைத்துனர் முல்லைவேந்தன் (40) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். கண்ணன் என்பவர் காரை ஓட்டி வந்தார்.
மதுரை மாவட்டம், கொட்டாம் பட்டி அருகே கச்சராயன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிர் பாராமல் முன்னால் சென்றுகொண் டிருந்த சிமெண்ட் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் அசோக் எம்எல்ஏ, அவரது மனைவி, மைத்துனர் ஆகியோர் காயமடைந்தனர். மகனும், டிரைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
காயமடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.