தமிழகம்

மாணவர்களிடையே பாகுபாடான கல்விக் கட்டணம்: சென்னை தனியார் பள்ளிக்கு கல்வித்துறை நோட்டீஸ் - பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் 11-ம் தேதி விசாரணை

செய்திப்பிரிவு

மாணவர்கள் இடையே பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் இரு மாதிரியான கல்விக் கட்டணம் நிர்ணயித்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை பால வித்யா மந்திர் பள்ளிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர்கள் 11-ம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

சென்னை அடையாறில் இயங்கி வரும் பால வித்யா மந்திர் பள்ளி நிர்வாகம் அண்மையில் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது.

அதில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை செலுத்தும் மாணவர்களுக்கு அடிப்படை கல்வி மட்டுமே அளிக்கப்படும் என்றும் கேன்டீன், நூலகம், விளையாட்டு மைதானம், இன்பச் சுற்றுலா, சிறப்பு வகுப்பு உள்ளிட்ட வசதிகள் கிடைக்காது என்றும், நிர்வாகம் நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மேற்கண்ட கூடுதல் வசதிகளை பெற முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த 2 வாய்ப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து உடனடியாக தெரிவிக்குமாறும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பெற்றோர்கள் போராட்டம்

பள்ளி நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையைப் படித்துப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையிலான இரு மாதிரியான கட்டண முறையை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி பெற்றோர்கள் கடந்த 1-ம் தேதி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த நிலையில், பெற்றோரின் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி பள்ளி நிர்வாகம், தலைமைச் செயல் அதிகாரி நாதனை பணியில் இருந்து நீக்கியதுடன் முதல்வர் சீனிவாச ராகவனை இடமாற்றம் செய்தது. மனிதவள மேம்பாட்டு மேலாளரான சுஜாதாவை பள்ளியின் முதல்வராக நியமித்தது. இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமைச் செயல் அதிகாரி மற்றும் முதல்வர் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகார் மனு

இதற்கிடையே, பள்ளி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து ஒருசில பெற்றோர் நீதிபதி எஸ்.ஏ.சிங்காரவேலு கமிட்டியிடம் நேரில் சென்று புகார் அளித்தனர். சிபிஎஸ்இ பள்ளி என்பதால் சென்னை அண்ணா நகரில் உள்ள சிபிஎஸ்இ மண்டல அலுவலகத்திலும் பெற்றோர் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, நீதிபதி சிங்காரவேலு கமிட்டி, கூடுதல் கல்விக் கட்டணம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு உத்தரவு பிறப் பித்தது.

இதையடுத்து, பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் எஸ்.கார்மேகம், எம்.பழனிச்சாமி ஆகியோர் விசாரணை அலுவலர்களாக நியமிக்கப்பட்ட னர்.

இந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் அவர்கள் இருவரும் சென்னை அடையாறில் உள்ள பால வித்யா மந்திர் பள்ளிக்குச் சென்றனர். அங்கு பள்ளியின் புதிய முதல்வர் சுஜாதாவிடம் புகார் தொடர்பான விளக்க நோட்டீசை அளித்தனர். வருகிற 11-ம் தேதி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த இருப்பதாக இணை இயக்குநர் கார்மேகம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT