நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை, முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை சாஹிம அறங்காவலர் எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார். அமைச்சர்கள்ஷாஜகான், முகமது பர்வேஸ், ரஞ்சித்குமார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர்நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை: நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவுக்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்கும் அரசாணையை நாகூர் தர்கா அறங்காவலர்களிடம் முதல்வர் விஜய் நேற்று வழங்கினார்.
நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழா வரும் நவ.10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாகச் சந்தனக் கூடுகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் சந்தனம் ஆண்டவரின் புனித சமாதியில் பூசப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்விழாவில் மத வேறுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர்.
இவ்விழாவுக்கு தேவையான சந்தன கட்டைகளை வழங்குமாறு தர்கா நிர்வாகம் சார்பில் அரசிடம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து 45 கிலோ 2-ம் தர சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்குமாறு வனத்துறை தலைவர், அரசுக்கு பரிந்துரை செய்தார். அதை கவனமுடன் பரிசீலித்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் காகர்லா உஷா, 45 கிலோ சந்தனக்கட்டைகளை தர்கா நிர்வாகத்துக்கு வழங்க உத்தரவிட்டார்.
இந்த சந்தனக்கட்டைகளை, இந்நிகழ்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அரசு விதித்துள்ளது. இந்த அரசாணையை முதல்வர் விஜய் நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் எச்.ஹாஜா நஜிமுதீனிடம் வழங்கினார். அப்போது சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அ.மு.ஷாஜகான், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ், வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.ரஞ்சித்குமார், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் கே.நவாஸ் கனி ஆகியோர் உடனிருந்தனர்.