தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் மழை மறைவு பகுதியில் அமைந்துள்ளதால் தென்மேற்கு பருவமழையின்போது குறைவான மழையே பெய்யும். எனினும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நேற்று நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 24 செ.மீ., அவலாஞ்சியில் 23 செ.மீ., எமரால்டில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும். குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யக் கூடும்.