செங்கல்பட்டில் வணிகர் சங்க நிர்வாகியை மிரட்டியதுடன் பணம் பறித்த புகார் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. வணிகர் சங்க நிர்வாகி. சில தினங்களுக்கு முன்பு இவரை 3 பேர் கொண்ட கும்பல் மிரட்டி ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றது. இது தொடர்பாக சுப்பிரமணி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரித்த போலீஸார் ஒழலூரைச் சேர்ந்த ராயப்பன், தினேஷ், செங்கல்பட்டைச் சேர்ந்த மதன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் பிடித்தனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து போலீஸ் தரப்பில் கூறிய தாவது:
கடந்த 2004-ல் சுப்பிரமணி அளித்த புகார் காரணமாக செங்கல் பட்டு தாலுகா காவல்நிலைய ஆய்வாளராக இருந்த தாம்சனை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதனால் ஆத்திர மடைந்த அவர் சுப்பிரமணியை மிரட்ட மேற்கண்ட 3 நபர்களை அனுப்பியுள்ளார். அவர்கள் மிரட்டியதுடன் பணத்தையும் பறித்துச் சென்றது தெரியவந்தது. அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்த போலீஸார், சென்னையில் தற்போது காவல் ஆய்வாளராக பணி செய்து வரும் தாம்சன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.