பெருமைகள் பல கொண்ட தாமி ரபரணி நதி, மாசுபட்டு கூவமாக மாறிவருவது குறித்து தன்னார்வ அமைப்புகள் எச்சரித்துக் கொண்டி ருக்கும் நிலையில், அந்த நதியை சுத்தப்படுத்த பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகள் களமிறங்கியிருக் கின்றன.
இந்த புண்ணிய நதியின் புனிதம் காக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அத்தகைய அமைப்புகளில் ‘தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஒன்று. இந்த அறக்கட்டளையானது, திருநெல் வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தமிழக ஊர்க்காவல் படை மற்றும் தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் குழுவுடன் இணைந்து நதியை சுத்தப்படுத்தும் முகாமை பாபநாசம் யானைப்பாலம் மற்றும் பாபநாசம் படித்துறை ஆறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டது. முகாமை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் ஆர். நடராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது:
நீரின்றி அமையாது உலகு. நீர்தான் அனைத்துக்கும் அடிப் படை என்பதை அனைவரும் உணர்ந்திருக்கிறோம். பூமியில் இருக்கும் நிலையான இயற்கை வளங்களை அழித்தால் பல்வேறு பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
முக்கிய காரணங்கள்
நீருக்காக உலகப் போர் நிகழும் அபாயம் குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். எனவே இருப்பதை கட்டிக்காக்க வேண்டும். தாமிரபரணி தமிழகத்திலேயே உருவாகி, தமிழக கடற்பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த நதி மாசுபட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் கெடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள் ளன. நகரமயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்குவது, அதிக விளைச்சலுக்காக அதிகமான ரசாயன உரங்களைப் பயன்படுத் துவது, விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவது. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன.
விழிப்புணர்வு அவசியம்
கழிவுப்பொருள்கள் நீர்நிலை களில் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், நீர்நிலை களும் கெட்டுவிடுகின்றன. வரும் சந்ததியினருக்காக சொத்து சேர்ப்பதைவிட, இயற்கையைப் பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைப்பதுதான் முக்கியம். விஞ்ஞானம் என்பது இருப்பதை குழிதோண்டி புதைக்க அல்ல. உலகத்துக்கே உழைப்பாளிகளை கொடுக்கும் நிலையில் இந்தியா இருக்கிறது. இங்கு இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்க நம்மாழ்வார் போன்றோர் போராடியிருக்கிறார்கள்.
சுற்றுச்சூழல் சட்டங்கள் சரியாக அமல்படுத்தப்படவில்லை. நதிநீர் மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் மூலம் தீர்வுகள் காண முடியும். இதுகுறித்த விழிப்புணர்வு அவசியம். நீர்நிலைகளைப் பாதுகாப்பது நமது முக்கிய கடமை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் அவர்.
அம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, யோகா ஆசிரியர் வீரபாகு, அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி. மணிமாறன், இன்ஸ்பெக்டர் மாடசாமி, தன்னார்வலர்கள் அபுல் கலாம் ஆசாத், அருள்ராஜ், புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. அங்குள்ள படித்துறையில் ஆற்றுக்குள் கிடந்த துணிகளை படகு மூலம் அள்ளி அப்புறப்படுத்தினர். இதுபோல் செடி, கொடிகள் வெட்டி அகற்றப் பட்டன. இதற்காக புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன.
முகாமில் விக்கிரமசிங்கபுரம் ஊர்க்காவல் படை கமாண்டர் பி. துரைசிங் தலைமையில் ஊர்க் காவல் படையினர், பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற் றனர். விக்கிரமசிங்கபுரம் நகராட்சிப் பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை செயலர் கபடி எஸ். முருகன், தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் குழு செயலர் கிரிக்கெட் பி. மூர்த்தி ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர்.