தமிழகம்

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய தளம்: ‘வள்ளுவன் பார்வை’ தமிழ் மின்மடல் தொடக்கம்

ஜி.ஞானவேல் முருகன்

பார்வையற்றோர் தங்கள் கருத்துகளை தாங்களாகவே பதிவிடும், பகிர்ந்துகொள்ளும் வகையில், முதன்முறையாக தமிழில் மின்மடல் ஒன்றைத் தொடங்கி வெற்றிகரமாக 250-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்துள்ளார் வங்கி ஊழியர் வெங்கடேசன்.

நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை பார்வையற்றவர்களும் பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ் தெரிந்த பெரும்பாலான பார்வை யற்றவர்கள் சமூக வலைதளங் களில் தங்கள் கருத்துகளை பதிவிடவும், பகிர்ந்து கொள்ளவும் வழியின்றித் தவித்து வந்தனர்.

இதற்கு தீர்வு காண முயன்றார் கோவை வங்கி ஒன்றில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரியும் வெங்கடேசன். சிறு வயதிலேயே பார்வையை இழந்த இவர் ஸ்கிரீன் ரீடிங் (திரை வாசிப் பான்) மென்பொருள் உதவியுடன் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் கம்ப்யூட்டருக்கு வரும் இ-மெயில்களை ஒலி வடிவில் கேட்டுப் பயனடைந்தவர்.

அன்றாட நிகழ்வுகள், கதை, கட்டுரை, இலக்கியம் என சமூக வலைதளங்களில் தான் கேட்டு உணர்ந்த அனைத்து விஷயங்களையும், அதுவும் தமிழில், பார்வையற்ற அனைவரும் தெரிந்துகொள்ளும் விதமாக ‘வள்ளுவன் பார்வை’ என்ற தமிழ் மின்மடலை கடந்த 2010-ம் ஆண்டு உருவாக்கினார் வெங்கடேசன். இதுதான் பார்வை யற்றவர்களுக்காக தமிழில் உருவாக்கப்பட்ட முதல் மின்மடல்.

கோவையில் தொடங்கிய இந்த இணையதள பயணத்தில் தற்போது 250-க்கும் அதிகமான பார்வையற்றோர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது தமிழ் மொழி தெரிந்த, உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பலர் இதில் தங்கள் பங்களிப்பைச் செலுத்துகின்றனர். இந்த குழுவில் இணைவோர், மின்மடலில் பதி விடப்படும் செய்திகள் மற்றும் தகவல்களை, ஸ்கிரீன் ரீடிங் மென் பொருள் உதவியுடன் கேட்டறிய முடியும். இதற்கு உதவியாக குழு உறுப்பினர்களுக்கு ஸ்கிரீன் ரீடிங் மென்பொருள் வழங்கப்படும்.

இந்த குழுவில் இணைந்துள்ள வர்களைச் சந்திக்கும் பொருட்டு ‘வள்ளுவன் பார்வை’ வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி முதல் முறையாக கடந்த ஆண்டு ஈரோட்டில் நடை பெற்றது. இந்த ஆண்டு திருச்சியில் நடைபெற்ற வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்த வெங்கடேசன், ‘தி இந்து’விடம் பகிர்ந்துகொண்டது:

என்னைப்போல பார்வையில்லாத, ஆனால் பெரிய பொறுப்பு களில் இருக்கும் பலர் இதில் உறுப் பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கள் மட்டுமே கருத்துகளை பதிவிட முடியும். இதற்காக எந்த கட்டணமும் இல்லை. அன்றாட ஆன்லைன் செய்திகள், கதை, கவிதை, ஆராய்ச்சிக் கட்டுரை, கருத்துகளை பலர் பதிவிட்டு வருகின்றனர். பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி கருத் தரங்கு குறித்த பயனுள்ள தகவல் களும் இடம்பெறுகிறது.

தமிழ் மீது கொண்ட ஈடுபாட் டால் உருவாக்கப்பட்ட இத்தளத் தில் உறுப்பினர்கள் கட்டாயம் தமிழில்தான் பதிவிட வேண்டும் என்பது பிரதான விதியாகும். எங்கள் குழுவில் யாரும் பரிதாபத்தை எதிர்பார்த்து சோகத் தைப் பிழிந்து பதிவிடுவதில்லை. கருத்துகளும், எழுத்துகளும் மிக வும் உற்சாகமானதாக இருக்கும்.

எங்கள் கம்ப்யூட்டர் உலகில் மவுஸ் கிடையாது. ஆனால், மவுஸ் இல்லாமலேயே கம்ப்யூட்டரை விரைவாகவும், நேர்த்தியாகவும் கையாள்கிறோம்.

கூகுள் தேடலில் ‘வள்ளுவன் பார்வை’ என ஆங்கிலத்தில் டைப் செய்தால் எங்கள் மின்மடல் விரியும். பார்வையற்றோர் மட்டு மின்றி அனைவரும் எங்கள் மின்மடலை ரசித்து மற்றவர்களுக் குப் பகிரலாம். இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.

SCROLL FOR NEXT